சபாநாயகர் அனுப்பிய 185 பக்க நோட்டீசுக்கு விளக்கமளிக்க ஒரு வாரமே அவகாசம் கொடுத்துள்ளதால், சமாதானமாக போவதா? வீம்பு பிடிப்பதா? என்ற இரு வேறு மனநிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மூவரும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாச்சலம் கலைச்செல்வன் மூவருக்கும் சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸ் சென்றடைந்துள்ளது. அதிமுகக்கு விரோதமாகவும், தினகரனுக்கு ஆதரவாகவும் செயல்பட்டதற்கான ஆதாரங்களை, அக்கட்சியின் கொறடா ராஜேந்திரன் கொடுத்துள்ளதை இணைத்து 185 பக்கத்தில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் சபாநாயகர். இந்த நோட்டீஸ் கையில் கிடைத்த 7 நாட்களுக்குள் நேரில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் சபாநாயகர் கூறியுள்ளார்.
இதனால் 3 எம்எல்ஏக்களும் பதவியை தக்க வைத்துக் கொள்ள முதல்வர் எடப்பாடி தரப்புடன் இணக்கமாக செல்வார்களா? அல்லது பதவி போனாலும் பரவாயில்லை என்று தினகரன் பக்கமே ஒதுங்கி விடுவார்களா? என்ற சூடான விவாதம் தமிழக அரசியலில் எழுந்துள்ளது. டிடிவி தினகரன் தரப்பிலோ, 3 பேரையும் காப்பாற்றும் முயற்சியைத் தான் இதுவரையும் எடுத்து வந்துள்ளனர். மக்களவைத் தேர்தல், சட்டசபை இடைத் தேர்தலின் போது பிரச்சாரத்தில் அப்பட்டமாக ஈடுபாடு காட்ட வேண்டாம் என்று கூறிவிட்ட தினகரன், சமீபத்தில் தாம் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதும், உஷாராக 3 பேரிடமும் கையெழுத்து போட வேண்டாம் என்று கூறிவிட்டாராம். இதனால் இப்போதும் அதிமுகவில் தான் நீடிக்கிறோம் என்ற ரீதியில் பதில் கொடுங்கள். தேர்தல் முடிவு வரும் வரை நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். அதன் பின் வருவதைப் பார்ப்போம் என்று தெம்பளித்துள்ளாராம் தினகரன்.
இதற்கு அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி ஓகே என்ற மனநிலையில் இருந்தாலும், மற்ற இரு எம்எல்ஏக்களான பிரபு, கலைச்செல்வன் ஆகியோர் ஊசலாட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்குக் காரணம் இவர்கள் இருவரும் தங்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் களுடன் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாகவே அதிருப்தியில் தினகரன் பக்கம் சாய்வதாகக் கூறி மிரட்டல் விடுத்தவர்கள். இதனால் இவர்களை சமாதானப்படுத்தி விடலாம் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விடுத்த தூது தான் ஊசலாட்டத்துக்கு காரணமாம்.
இதனால் இவர்கள் இருவரும் எம்எல்ஏ பதவியை காப்பற்றிக் கொள்ள, தாங்கள் இப்போதும் அதிமுக பக்கம்தான் உள்ளோம். கட்சி விரோத செயல்களில் எதுவும் ஈடுபடவில்லை என்ற ரீதியில் விளக்கம் கொடுத்து சரண்டர் ஆனாலும் ஆகலாம் என்ற பேச்சுக்கள் உலா வருகிறது.
ஆனாலும் சபாநாயகருக்கு திமுக தரப்பில் கொடுக்கப்படும் நெருக்கடியால் தேர்தல் முடிவுகள் வரும் வரை பதவிப்பறிப்பு நடவடிக்கை எதுவும் பாயாது என்றும் இருவரும் நம்புகின்றனர். இதனால் அதிமுகவா?அமமுகவா? என்ற உறுதியான முடிவை தேர்தல் முடிவுகள் வந்த பின் எடுக்கலாம் என்ற யோசனையிலும் இருக்கிறார்களாம். எது எப்படியோ? அதிமுக ஆட்சி நீடிக்குமா? இந்த 3 எம்எல்ஏக்களின் பதவி தப்புமா? என்பதற்கெல்லாம் விடை காணப் போகும் நாள் மே 23-ந் தேதி என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. ஆம், அன்றைக்குத் தான் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள்.