திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளில் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ள இடைத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.தனது பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் தினமும் புதுப்புது யுக்திகளை கையாள்வது பொது மக்களிடையேயும், கட்சியினரிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நடந்து முடிந்த மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது தான் தங்கியுள்ள ஊரில் அதிகாலையில் நடைபயிற்சி செல்லும் போது அதையே பிரச்சாரக் களமாகவும் பயன்படுத்தினார் மு.க.ஸ்டாலின் . அதிகாலை நேரத்தில் பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதிகளில் டிசர்ட், டிராக் சூட்டுடன் நடந்து சென்றபடி அவர் வாக்கு சேகரித்த விதம் பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது கடந்த சில நாட்களாக 4 தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தனது பிரச்சார யுக்தியை சற்று மாற்றியுள்ளார். வெறுமனே வேன் பிரச்சாரம் செய்வதை விட்டு, அந்தந்த பகுதிகளில் பொது மக்களுடன் கலந்துரையாடல் பாணியை கையாள்கிறார். ஒட்டப்பிடாரம் தொகுதி பிரச்சாரத்தில் இது மாதிரி கலந்துரையாடல் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது. நேற்றும், இன்றும் திருப்பரங்குன்றத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மு.க.ஸ்டாலின் முக்கிய கிராமங்களில் கிராமசபை நடத்துவது போல், திமுக நிர்வாகிகளுடன் திண்ணையில் அமர்ந்து அந்தக் கிராம மக்களின் குறைகளைக் கேட்டபடி பிரச்சாரம் செய்கிறார்.
இன்று காலை கைத்தறி நெசவாளர்கள் ஆயிரக்கணக்கில் வசிக்கும் நிலையூர் கைத்தறி நகரில், கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தினார் மு.க.ஸ்டாலின் .பின்னர் அந்த தொழிலாளர்கள் கைத்தறியில் நெசவு செய்வதை பார்த்த மு.க.ஸ்டாலின் தானும் நெசவு செய்வது போல் போஸ் கொடுத்து அவர்களை சந்தோசப்படுத்தினார்.