மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 50 சீட்களுக்கு கீழ் கிடைத்தால் ஆச்சர்யமான விஷயம் என்று சுப்பிரமணிய சாமி மொட்டையாக பதிவிட்ட ஒரு 'டுவீட்' அக் கட்சியினரை சிறிது நேரத்தில் பதறச் செய்து விட்டது. கடைசியில் உ.பி. மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் 50 ஐத் தான் குறிப்பிட்டேன் என்று கூறி சமாளித்துள்ளார் சு.சாமி.
ஏதோ ஒரு அர்த்தத்தில் ஏதாவது ஒரு கருத்தைச் சொல்லி பகீர் சர்ச்சைகளை ஏற்படுத்துவதில் கெட்டிக்காரக் கில்லாடியான பாஜக எம்.பி.யாக உள்ள மூத்த தலைவர் சுப்பிரமணியசாமியின் வேலையாகப் போய்விட்டது. அவர் கூறும் கருத்தில் குழப்பம் இருந்தாலும் அதில் ஒரு உள்ளர்த்தம் இருக்கும் என்பதில் அவரைப் பற்றி நன்கு தெரிந்திருப்பவர்களுக்கு தெரியும். தற்போது தான் சார்ந்த பாஜகவினரையே அவ்வப்போது கலாய்த்து வருகிறார்.
அதன் ஒரு கட்டமாக இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் பாஜகவுக்கு 50 சீட்டுகளுக்கு குறைவாக குறைவாக கிடைத்தால் அது எனக்கு ஒரு பெரிய ஆச்சர்யமான விஷயமாக இருக்கும் என மொட்டையாக ஒரு பதிவைப் போட்டு அக்கட்சியினருக்கு திடீர் ஷாக் ஒன்றை கொடுத்து விட்டார். சுப்பிரமணிய சாமி என்ன சொல்ல வருகிறார் என கிறுகிறுத்துப் போன அக்கட்சியினர், பாஜகவுக்கு 50 தொகுதிகள் தானா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு டிவிட்டரில் பதிவிட்டு விட்டனர். சிலரோ மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 50 ஐ குறிப்பிடுகிறீர்களா? அல்லது உ.பி.யில் மட்டும் ஜெயிக்கக் கூடிய தொகுதிகளை குறிப்பிடுகிறீர்களா? சாமி, கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன் என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி எழுப்பியுள்ளனர் பாஜகவினர் .
இதற்கெல்லாம் ரொம்ப கூலாக பதிலளித்துள்ள சு.சாமி, நான் உ.பி.யில் உள்ள 80 தொகுதிகளில் 50-க்கும் மேல் பாஜக வெற்றி பெறும் என்பதைத் தான் இவ்வாறு குறிப்பிட்டேன் என்று கூறி சமாளித்துள்ளார். ஒரு வேளை நாடு முழுவதும் மொத்தமே 50 தொகுதிகள் தான் பாஜகவுக்கு கிடைக்கப் போகிறது என்ற உண்மையை சு.சாமி சொல்ல வந்து இப்படி மழுப்புகிறாரோ என்ற சந்தேகமும் சிலருக்கு எழாமல் இல்லை.