சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம் இந்து தீவிரவாதம் என்று கமல்ஹாசன் பேசியது பெரும் சர்ச்சையாகி விட்டது. கமலின் கருத்தால் கொந்தளித்துப் போன பாஜக தரப்பு தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளது.
இடைத்தேர்தல் நடைபெறும் அரவக்குறிச்சி தொகுதியில் பேசிய மக்கள்நீதி மய்யம் கட்சித் தலைவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. அரவக்குற்ச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் கமல் பேசுகையில், இஸ்லாமியர்கள் அதிகம் பேர் இருக்கும் இடம் என்பதால் சொல்லவில்லை; காந்தி சிலைக்கு முன் சொல்கிறேன்.. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து அவர் பெயர் கோட்சே என்றார். மேலும் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரனாக, அந்தக் கொலைக்கு கேள்வி கேட்க வந்திருப்பதாக தெரிவித்தார்.சமரச இந்தியா மற்றும் சமமான இந்தியாவுக்கு எதிரான போக்கு காந்தி கொலையிலிருந்தே தொடங்குவதாக கமல் குறிப்பிட்டார்.
கமலின் இந்தப் பேச்சு இப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கமலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,
இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் இந்து தீவிரவாதம் என்ற வார்த்தையை பயன்படுத்தியது மட்டுமல்லாமல், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம் இந்து தீவிரவாதம் என்று கமல்ஹாசன் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார். வாழ்வில் எந்த ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்காத கமல், தான் காந்தியின் கொள்ளுப் பேரன் என்று சொல்ல எந்த தகுதியும் இல்லாதவர். மதக்கலவரத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும் அளவிற்கு கமல் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தமிழின் ச குறிப்பிட்டுள்ளார். இத்தகைய கருத்துக்கள் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி என்றும், முஸ்லிம் ஓட்டுக்காக இந்துக்களை இழிவு படுத்தும் செயலைப் பாருங்கள் என்றும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கமலஹாசனால் ஒரு சதவீத வாக்குகள் கூட வாங்க முடியாது என்றும், ஆனால் விஸ்வரூபம் படத்திற்கு பயங்கரவாதிகள் முன் கேவலம் பணத்திற்காக கமல் மண்டியிட்டதை மறக்க முடியவில்லை என்றும் ட்விட்டர் பதிவில் எச்.ராஜா கூறியுள்ளார்.
இதற்கெல்லாம் ஒரு படி மேலே கமலை விமர்சித்துள்ளார் அதிமுகவைச் சேர்ந்த தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. மோடி எங்கள் டாடி என்று சொந்தம் கொண்டாடிய ராஜேந்திர பாலாஜி, கமலின் நாக்கை அறுக்க வேண்டி வரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே தேர்தல் பிரச்சாரத்தில் நடத்தை விதிகளை மீறி இந்து தீவிரவாதம் என்று பேசிய கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கமல் கூறிய கருத்து சரியானதுதான் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.