ஒரு கேள்விக்கும் பதிலளிக்காத பிரதமர் மோடியின் பத்திரிகையாளர் சந்திப்பை கிண்டலடிக்கும் வகையில் டெலிகிராப் ஆங்கில நாளிதழ், சிறிது காலியிடத்தை விட்டு செய்தி வெளியிட்டிருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி, இறுதி கட்ட பிரச்சாரத்தை முடித்த பின்பு, டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் அமித்ஷாவுடன் சேர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். இதற்கு பத்திரிகையாளர்களை அழைக்கும் போது, அமித்ஷா பேட்டி அளிக்கப் போகிறார் என்றே அழைத்திருந்தனர். ஆனால், திடீரென அங்கு பிரதமர் மோடியும் வந்திருந்தார்.
கடந்த 2014ம் ஆண்டில் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி ஒரு முறை முழுமையான செய்தியாளர் சந்திப்பை(பிரஸ் மீட்) நடத்தியதில்லை. நாடாளுமன்ற வளாகத்தில் மைக்கை பிடித்து கொண்டு நிற்கும் மீடியாவிடம், ‘‘நாடாளுமன்றம் சுமுகமாக நடக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். இந்த தொடரில் ஆக்கப்பூர்வமாக விவாதிப்போம்’’ என்று ஸ்டீரியோ டைப்பில் சொல்லி விட்டு போனதுடன் சரி. ஒரு முறை கூட நிருபர்களின் கேள்விகளை எதிர்கொண்டதில்லை.
அதனால், பிரதமர் மோடி பிரஸ் மீட் என்றதும் செய்தியாளர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆனால், மோடியோ வழக்கம் போல் அவரது பிரச்சாரம் மற்றும் வெற்றிவாய்ப்பு பற்றி கூறி விட்டு ஒதுங்கினார். எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல், ‘நான் கட்டுப்பாடான தொண்டன். கட்சித் தலைவர் தான் பதிலளிப்பார்’ என்று அமித்ஷாவிடம் தள்ளி விட்டார்.
இதை கொல்கத்தாவில் இருந்து வெளியாகும் தி டெலிகிராப் ஆங்கில நாளிதழ் கிண்டலடித்துள்ளது. முதல் பக்கத்தில், பிரஸ் மீட்டில் பிரதமரின் முகபாவனைகளை காட்டும் 7 படங்களை வெளியிட்டு, கீழே சிறிது இடத்தை காலியாக விட்டுள்ளனர். அதற்கு கீழே, ‘‘இந்த இடம் பிரஸ் மீட்டிங்கில் பிரதமர் எப்போது கேள்விகளுக்கு பதிலளிக்கிறாரோ, அப்போது அந்த பதில்களை இங்கு அச்சிடுவோம். இதற்காக இந்த இடத்தை ரிசர்வ் செய்துள்ளோம்’’ என்று குறிப்பிட்டு கிண்டல் செய்திருக்கிறார்கள்.