ராஜீவ் ஊழல்வாதியா? - மோடி கூறியது அதிர்ச்சி..! ராகுலின் 'நறுக்' பதில் ஓ.கே..! மகாத்மாவின் பேரன் கருத்து!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியை, இந்த நாட்டில் யாருமே ஊழல்வாதியாக கருதவில்லை. அவரை ஊழல்வாதியாக உயிர் விட்டார் என்று தற்போது பிரதமர் மோடி கூறுவது அதிர்ச்சியளிக்கிறது என்று மகாத்மா காந்தியின் பேரன் தெரிவித்துள்ளார்.


மகாத்மா காந்தியின் பேரனும், அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியருமான டாக்டர் ராஜ்மோகன் காந்தி எழுதுதியுள்ள ஒரு கட்டுரையில் கூறியிருப்பதாவது:
30 ஆண்டுகளுக்கு முன்னர், அமேதி தொகுதியில் ராஜிவ் காந்தியை எதிர்த்து ஜனதா தளம் கட்சியால் நிறுத்தப்பட்ட வேட்பாளர் நான். எனவே, எனக்கு எதிராக நின்ற வேட்பாளர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து, தற்போதைய பிரதமர் மோடி சொன்ன கருத்தை விமர்சிக்க எனக்கு அருகதை உண்டு என நினைக்கிறேன்.

உத்தரப் பிரதேசத்தில், அமேதியை ஒட்டியுள்ள பிரதாப்கர் தொகுதியில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முன்னால் அமர்ந்திருந்த மக்களை விட்டுவிட்டு, அமேதியின் இன்றைய காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியை மானசீகமாக முன்னிறுத்தி பேசியிருக்கிறார்.என்ன பேசியிருக்கிறார்?

உன்னுடைய தந்தை அப்பழுக்கு இல்லாத மிஸ்டர் க்ளீன் என்று அவருடைய எடுபிடிகள் சொன்னார்கள். ஆனால், உண்மையில் ப்ரஷ்டாச்சாரி நம்பர் 1 என்ற பெயரோடுதான் அவரது வாழ்க்கை முடிவுக்கு வந்தது என்று மோடி பேசியிருக்கிறார். (பிரஷ்டாச்சாரி என்பதற்கு ஊழல்வாதி என அர்த்தம் சொல்கின்றனர்)

ராகுல் காந்தியின் தந்தை ராஜிவ் காந்தி 1984 தொடங்கி 1989 வரையிலும் இந்த நாட்டின் பிரதமராக இருந்தார் என்பதும், ஒரு பயங்கரவாதியின் குண்டு வெடித்து அவரது வாழ்க்கை முடிவுற்றது என்பதும் உலகமே அறிந்த உண்மை.

ராஜீவ் பிரதமராக வந்ததில் இருந்து மூன்று ஆண்டுகள் வரையிலும் மிஸ்டர் க்ளீன் என்றுதான் அவர் அழைக்கப்பட்டார் என்பது உண்மை. ஆனால் அவ்வாறு அவருக்கு பட்டம் சூட்டியது அவருடைய எடுபிடிகளோ அல்லது கட்சிக்காரர்களோ அல்ல. இந்த நாட்டின் ஊடகங்கள் ராஜீவுக்கு சூட்டிய செல்லப் பெயர் அது. அந்தக் காலகட்டத்தில் இந்திய ஊடகங்கள் யாருக்கும் அடிமையாகாமல் சுதந்திரமாக செயல்பட்டதால் அவை சொல்வதை உண்மையென மக்களும் ஏற்றுக் கொண்டனர்.

இந்திய ராணுவத்துக்கு பீரங்கிகள் வாங்க 1987 -ல் ஸ்வீடனின் போபர்ஸ் கம்பெனிக்கு ஆர்டர் கொடுத்ததில் லஞ்சம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து, ராஜீவ் காந்தியை அதோடு சம்பந்தப்படுத்த பல முயற்சிகள் நடந்தன. நானும்கூட போபர்ஸ் ஊழலில் ராஜீவுக்கு தொடர்பு இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், ராஜீவ் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு ஆதாரத்தையும் எவராலும் காட்ட இயலவில்லை. அதோடு அந்த விவகாரம் முடிந்து போனது.

எனவேதான், அடுத்த இரண்டு ஆண்டுக்குள் அதே ராஜீவ் காந்தியை எதிர்த்து அமேதியில் நான் போட்டியிட்டபோது, போபர்ஸ் குறித்து எவரும் பேசவே இல்லை. ஊடக சுதந்திரமே எனது பிரசாரத்தில் முக்கிய இடம் வகித்தது. ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி பிரசாரம் செய்தேன்.

நான் மட்டும் அல்ல; என்னை ஆதரித்து அங்கு வந்து பிரசாரம் செய்த வி.பி.சிங் (அடுத்த சில மாதங்களில் அவர் பிரதமர் ஆகிறார்), முலாயம் சிங் உள்ளிட்ட ஏனைய தலைவர்களும் போபர்ஸ் குறித்து பேசவே இல்லை. அது முடிந்துபோன கதை என்பதும், ராஜீவுக்கு தொடர்பில்லை என்பதுமே காரணம்.

அமேதியில் நான் தோற்றேன். ராஜீவ் வெற்றி பெற்று எம்.பி.யானார். உத்தரப் பிரதேச சட்டசபை என்னை ராஜ்ய சபா எம்.பி.யாக தேர்ந்து எடுத்து, நானும் நாடாளுமன்றம் சென்றேன். என் நண்பர்கள் ஆளும் கட்சி வரிசையில் அமர்ந்திருந்தனர். ராஜீவ் எதிர்க்கட்சி தலைவராக எதிர் வரிசையில் இருந்தார். ராஜீவும் நானும் அப்போது பலமுறை சந்தித்து உரையாடி இருக்கிறோம். அந்த நினைவுகள் இனிமையானவை.
1991 ல் தமிழ்நாட்டில் அவர் கொலை செய்யப்படுவது வரையில் அந்த அன்பு தொடர்ந்தது.

அந்தக் காலகட்டத்தில் இந்த நாட்டில் யாருமே ராஜீவ் காந்தியை ஊழல்வாதியாக கருதவில்லை. அப்படி நினைத்தவர்கள் யாரேனும் இருந்தால், அவர்களை நான் சந்தித்தது இல்லை. ராஜீவ் ஊழல் செய்தார், லஞ்சம் வாங்கினார் என்று ஒரு எம்.பி சொல்லிக்கூட நான் கேட்டது இல்லை.

எதிர்கட்சிகள் மட்டுமல்ல; ராஜீவை எதிர்த்த ஆளுங்கட்சி வரிசையிலும் யாருமே அவ்வாறு அவரை நினைக்கவில்லை என்பது எனக்கு தெரியும்.

தமிழ்நாட்டில் அந்த கொடூரம் நிகழ்ந்தபோது, ஒரு அருமையான மனிதனை இப்படி அநியாயமாக கொன்று விட்டார்களே என்று அத்தனை பேரும் தாங்க முடியாத அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்ந்தனர்.

ஒருவேளை, “ராஜிவ் காந்தி ஊழல் செய்யாமல் இருக்கலாம்; ஆனால் சுற்றி இருந்தவர்கள் செய்த ஊழலை சகித்துக் கொண்டார்; ஆகவே அதுவும் குற்றமே” என்று அன்றைக்கு யாராவது நினைத்திருந்தால்கூட, 28 ஆண்டுகள் கடந்த பின்னர், அவருடைய மகனைப் பார்த்து, “உன் தந்தை இந்தியாவின் நம்பர் ஒன் ஊழல்வாதியாக உயிரை விட்டார்” என்று சொல்வார்களா? கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது.

இப்படி ஒரு கருத்து, அதுவும் பிரதமர் பதவி வகிப்பவரின் வாயில் இருந்து வருவதை என்னால் நம்பவே முடியவில்லை.

எல்லோரையும் போலவே நானும் பேச்சிழந்து நிற்கிறேன். பலரும் அப்படி பேசியவரை கண்டிக்கின்றனர்; விமர்சிக்கின்றனர்.
என்றாலும், ராகுலைப் போல நறுக்கென்று பதில் அளித்தவர் எவருமில்லை.

“மோடி அவர்களே, யுத்தம் முடிக்கு வந்து விட்டது. உங்கள் கர்மா உங்களுக்காக காத்திருக்கிறது. உங்களைப் பற்றி ஆழ்மனதில் நீங்கள் கொண்டிருக்கும் எண்ணங்களை அப்படியே என் தந்தை மீது சுமத்துவதால், கர்மாவிடம் இருந்து நீங்கள் தப்பிவிட முடியாது. அவரவர் செயல்களுக்கான பலனை அனுபவித்தே தீர வேண்டும். உங்களுக்கு எனது நிறைந்த அன்பும், இறுக்கமான அரவணைப்பும்” என்று ராகுல் கூறியுள்ள செய்தி, அவர் மீது மோடி நேரடியாக ஏவிய அவதூறுக்கு மிகப் பொருத்தமான பதில் என்று ராஜ்மோகன் காந்தி தனது கட்டுரையில் கூறியுள்ளார்.

இரட்டை குடியுரிமை விவகாரம் - ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்