தேர்தல் ஆணையர்களிடையே கருத்து வேறுபாடு என்பது சகஜமான ஒன்று தான் என்றும், அனைவருக்கும் ஒத்த கருத்து இருக்க வேண்டும் என்பதை எதிர்பார்க்க முடியாது என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விளக்கமளித்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக தாம் தெரிவித்த கருத்துக்களை தலைமை தேர்தல் ஆணையர் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா கூறியிருந்தார். பல முறை தம்முடைய கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டதால் இனிமேல் நடக்கவுள்ள தேர்தல் ஆணையர்களின் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை எனக் கூறி தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு அவர் கடிதம் எழுதியதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
இந்நிலையில் அசோக் லவாசாவின் கடிதத்திற்கு தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விளக்கம் அளித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேர்தல் ஆணையர்கள் இடையே கருத்து வேறுபாடு என்பது சகஜமான ஒன்று தான். இப்போது நடந்துள்ளது புதிய விஷயம் அல்ல.இதற்கு முன்பும் இது போன்ற கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளது. தேர்தல் ஆணையர்கள் 3 பேருமே ஒத்த கருத்துடன் தான் இருக்க வேண்டும் என்பதும் கட்டாயமில்லை. முக்கிய விவகாரங்களில் உரிய நேரத்தில் விவாதித்து முடிவெடுப்போம் என்ற ரீதியில் தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவின் கடிதத்திற்கு தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விளக்கமளித்துள்ளார்.