தேர்தல் பிரச்சாரத்தை முடித்தவுடன் பிரதமர் நரேந்திர மோடி, கேதர்நாத், பத்ரிநாத் என்று கிளம்பி விட்டார்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஏழாவது மற்றும் இறுதிகட்டமாக 59 தொகுதிகளில் மே 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதிகளில் மே 17ம் தேதி பிரச்சாரம் முடிந்தது. மத்தியபிரதேசத்தில் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, மே 18ம் தேதி காலையில் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத்துக்கு ஹெலிகாப்டரில் சென்றார்.
கேதர்நாத் சிவன் கோயிலுக்குள் பாரம்பரிய உடையில் சென்ற பிரதமர் மோடி அங்கு சிறிது நேரம் அமர்ந்து பூஜைகள் செய்தார். பின்னர் கோயில் பிரகாரத்தைச் சுற்றி வலம் வந்தார். அதன்பின், கோயிலுக்கு வெளியே வந்து அங்கு கூடியிருந்த மக்களைப் பார்த்து கையசைத்தார். அதன்பின், உத்தரகண்ட் தலைமைச் செயலாளர் உத்பால் குமாரை அழைத்து கேதர்நாத் மறுசீரமைப்பு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், அங்குள்ள ஒரு குகையில் அமர்ந்து தியானம் செய்தார். இன்றிரவு கேதர்நாத்திலேயே மோடி தங்குகிறார்.
ஏற்கனவே கேதர்நாத்துக்கு 4 முறை மோடி வந்திருக்கிறார். கடந்த 2017ல் மே மாதம் ஒரு முறையும், அக்டோபரில் ஒரு முறையும் வந்திருக்கிறார். மே 19ம் தேதி இறுதி கட்ட தேர்தல் நடைபெறும் போது, மோடி அடுத்த வழிபாட்டுக்காக பத்ரிநாத் செல்கிறார்.