பாஜகவை வீழ்த்துவதற்காக எந்த சமரசத்திற்கும் தயார் என்று இறங்கியுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சி தலைவர்களை வரிசையாக சந்திக்கத் தொடங்கியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்களை அணிதிரட்டுவது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடனும் இன்று முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட முடிவடையும் தருவாய்க்கு வந்து விட்டது. அடுத்த கட்டமாக மத்தியில் ஆட்சி அமைக்கும் வியூகங்களை வகுப்பதில் பாஜகவும், காங்கிரசும் தீவிரம் காட்டத் துவங்கி விட்டன. பாஜகவை எந்த விதத்திலும் மீண்டும் ஆட்சியமைக்க விடக் கூடாது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கங்கணம் கட்டி செயல்படத் தொடங்கி விட்டார். இதற்காக தனது பரம எதிரியான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உட்பட எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க தயார் என்றும் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைப்பது குறித்து கருத்து தெரிவித்தார். பரம எதிரியான சந்திரசேகர ராவுடன் கூட கூட்டணி வைக்க தாம் தயார் என்று அறிவித்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோரை சந்தித்து சந்திரபாபு நாயுடு பேச்சுவார்த்தையும் நடத்தினார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்தும் சந்திரபாபு நாயுடு முக்கிய ஆலோசனை நடத்தினார். வரும் 23-ந் தேதி டெல்லியில் நடக்க உள்ள எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் குறித்து சந்திரபாபு நாயுடு முக்கிய ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
ராகுல்காந்தியுடனான சந்திப்புக்கு பிறகு, அடுத்தடுத்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோரையும் சந்திரபாபு நாயுடு சந்தித்து ஆலோசிக்க உள்ளார்.. இதில் சமீபத்திய மே.வங்கத்தில் பாஜகவின் வன்முறையால் கடும் கோபத்துக்கு ஆளாகியுள்ள மம்தா பானர்ஜி, காங்கிரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.