கோட்சேவை புகழ்ந்து பேசிய 3 பா.ஜ.க. பிரமுகர்களுக்கு நோட்டீஸ்! அமித்ஷா திடீர் நடவடிக்கை!!

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை புகழ்ந்து பேசிய 3 பா.ஜ.க. பிரமுகர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்து கடைசி கட்ட வாக்குப்பதிவு மே 19ம் தேதி நடைபெறவுள்ளது. மே 22ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த தேர்தலில் பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் ஏடாகூடமாக பேசி, தினம்தினம் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். கடைசியாக, போபால் நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர் பிரசாரத்தின் போது, ‘‘நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர்’’ என்று புகழ்ந்தார். அவ்வளவுதான்!

காந்தியை கொன்றவரை தேசபக்தர் என்பதா? என்று நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் ஒலித்தன. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ட்விட்டர், பேஸ்புக் உள்பட சமூக ஊடகங்களில் பொது மக்களும் எதிர்ப்பு கருத்துக்களை பதிவிட்டனர். இந்நிலையில், இது தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக அமையுமோ என்று அக்கட்சித் தலைமை பயந்தது. இதையடுத்து, பிரக்யா சிங் தனது பேச்சு சொந்த கருத்து என்று கூறி, மன்னிப்பு கேட்டார். அவரது பேச்சு குறித்து பிரதமர் மோடியோ, பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவோ கருத்து எதுவும் கூறாமல் இருந்தனர்.

இதன்பின், கர்நாடகாவில் தட்சிண கன்னடா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் நளீன்குமார் கட்டீல், ‘‘ஒரு ஆளை கொன்ற கோட்சே, 72 பேரை கொன்ற கசாப், 17 ஆயிரம் பேரை கொன்ற ராஜீவ்காந்தி. இதில் எது மிகக் கொடூரம்?’’ என்று ட்விட்டரில் பதிவிட்டார். அதாவது, இந்திரா காந்தி கொலைக்கு பின், சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 17 ஆயிரம் பேர் இறந்ததாகவும், அதற்கு ராஜீவ் காரணம் என்னும் வகையிலும் பதிவிட்டார். இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே போல், பா.ஜ.க.வின் இன்னொரு முக்கியப் பிரமுகர் அனந்தகுமார் ஹெக்டேவும், காந்தியை கொன்ற கோட்சே புகழ் பாடும் வகையி்ல் கருத்துக்களை ட்விட் செய்தார்.

கோட்சேவை ஆதரித்து பா.ஜ.க.வினர் பேசியது நாடு முழுவதும் பலத்த கண்டனக் குரல்களை எழுப்பியிருக்கிறது. முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘நாதுராம் கோட்சே தேசபக்தர் என்றால், நான் தேச விரோதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இன்னும் ஒரு கட்ட வாக்குப்பதிவு உள்ள நிலையில், கோட்சே புகழ் பாடுவது என்பது, பா.ஜ.க.வுக்கு எதிராக திசை திரும்பும் என்பதால் அக்கட்சி பயப்படுகிறது. இதனால், பிரக்யா சிங், நளீன்குமார் கட்டீல், அனந்த குமார் ஹெக்டே ஆகியோரிடம் அவர்களின் பேச்சுக்கு 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கேட்டு கட்சித் தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது பற்றி, ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமித்ஷா, ‘‘மூன்று பேரின் கருத்தும் பா.ஜ.க. கொள்கைக்கு முரணானது. அவர்கள் மன்னிப்பு கேட்டு விட்டாலும், அவர்கள் மீது விசாரணை நடத்த ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு இந்த பிரச்னை அனுப்பப்படும்’’ என்று கூறியுள்ளார்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்