மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த பெரும் தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்று டெல்லியில் நடைபெறும் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டத்தில் தனது முடிவை ராகுல் காந்தி அறிவிப்பார் என்றும், ஆனால் அதனை கட்சியின் மூத்த தலைவர்கள் ஏற்பார்களா? என்பதும் இன்றைய கூட்டத்தில் தெரிந்துவிடும்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, கடந்த 2014 தேர்தலில் அடைந்தது போல் மிக மோசமான தோல்வியை தழுவியுள்ளது. காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தலைவரான பின் சந்தித்த முதல் மக்களவைப் பொதுத் தேர்தல் இதுவாகும். தேர்தலில் அமோக வெற்றியைத் தேடித் தந்து, ராகுல் காந்தி பிரதமராவார் என்ற காங்கிரசாரின் நினைப்பு பலிக்காமல் அக்கட்சிக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்கள் பலவற்றில் காங்கிரஸ் சுத்தமாக துடைத்தெறியப் பட்டுள்ளது. காங்கிரஸ் ஆளும் ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கிடைத்த படுதோல்வி அக் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் இந்தத் தோல்விக்கு தலைவர் என்ற முறையில் முழுப் பொறுப்பையும் ஏற்பதாக ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான் கட்சியின் உயர் அதிகாரம் படைத்த காரியக் கமிட்டிக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.இந்தக் கூட்டத்தில், காங். மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
அப்போது, மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்ததற்கான காரணங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, ரஃபேல் போர் விமான ஒப்பந்தம், ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றை குறிப்பிட்டு பாஜகவுக்கு எதிராக ராகுல் தீவிர பிரச்சாரம் செய்தார். எனினும், அவரது சொந்தத் தொகுதியான அமேதியில் கூட இந்த முறை அவரால் வெற்றி பெற முடியவில்லை. பல மாநிலங்களில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை .
இதனால் தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி பதவி விலகுவார் என்றும், அவர் தனது ராஜினாமா கடிதத்தை காரியக் கமிட்டி கூட்டத்தில் முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ராகுல் காந்திக்கு எதிராக தலைவர் பதவிக்கு, தற்போது யாரும் போர்க்கொடி உயர்த்துவதாகத் தெரியவில்லை. இதனால் கட்சியின் மூத்த தலைவர்கள் அவரை சமாதானப்படுத்தி, பதவியில் தொடர வலியுறுத்துவார்கள் என்றும், இது வழக்கமாக நடைபெறும் ஒரு சடங்கு தான் என்றும் காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று, உ.பி., ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸ் மேலிடத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.