உத்தரபிரதேசத்தில் பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி மகா கூட்டணியை அமித்ஷாவின் ராஜதந்திர பார்முலா வீழ்த்தியதை அடுத்து, விரைவில் அந்த கூட்டணி உடைந்து விடும் என்று செய்திகள் உலா வருகின்றன.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பகுஜன்சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கூட்டணி வெறும் 15 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 73 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியிருந்தது.
அதன்பின், சட்டசபைத் தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.
இதையடுத்து, நேர் எதிரிகளான பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் திடீரென கூட்டணி அமைத்து இடைத்தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றன. அதே போல், நாடாளுமன்றத் தேர்தலிலும் மெகா கூட்டணி அமைத்தன. அந்த கூட்டணிதான் 50க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிப்புகள் கூட கூறியிருந்தன.
ஆனால், பா.ஜ.க. தலைவர் அமித்ஷா போட்ட ராஜதந்திர பார்முலா, அந்த அணியை வீழ்த்தி விட்டது. பகுஜன் 10 இடங்களையும், சமாஜ்வாடி 5 இடங்களையும் மட்டுமே பிடித்துள்ளன. காங்கிரசில் சோனியா மட்டும் தப்பியுள்ளார், மீதி 64 இடங்களையும் பா.ஜ.க.வே கைப்பற்றியுள்ளது.
பகுஜன் கூட்டணியில் வென்ற 15 பேரில் 6 பேர் முஸ்லீம்கள். அந்த அணி 10 முஸ்லிம்கள்,
12 யாதவர்கள், 20 ஜாதவ் என்று தங்கள் கட்சிக்கு ஆதரவு தரும் பெரும்பான்மை ஜாதியினரையே வேட்பாளர்களாக நிறுத்தியிருந்தனர். இதையடுத்து, பா.ஜ.க. கட்சி, அந்த ஜாதியினரை கைவிட்டு விட்டு, இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை 28 இடங்களிலும், உயர்சாதிகளான பிராமணர்களை 14 தொகுதிகளிலும், தாக்குர் இனத்தவரை 14 தொகுதிகளிலும் நிறுத்தியது. ஒரு முஸ்லிம் வேட்பாளரைக் கூட அந்த கட்சி நிறுத்தவில்லை. அதே போல், மேனகா காந்தி உள்பட பல வேட்பாளர்கள் பிரச்சாரத்தின் போது, இந்துத்துவா கொள்கைகளையே அதிகம் பேசினர். அதிலும் மேனகா காந்தி ஒரு படி மேலே போய், ‘முஸ்லிம்கள் எனக்கு வாக்களிக்கா விட்டால் பரவாயில்லை’ என்ற அளவுக்கு பேசியிருந்தார்.
இந்த வகையில், உயர்சாதியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினரில் இந்துக்களின் ஓட்டுகள் பா.ஜ.க. பக்கமாக சாய்ந்து விட்டதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. எனவே, அமித்ஷாவின் ராஜதந்திர பார்முலாவே பா.ஜ.க.வுக்கு பெரிய வெற்றியைத் தந்திருக்கிறது என்று உ.பி. மாநில பத்திரிகைகள் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்து எழுதுகின்றன.
பகுஜன், சமாஜ்வாடி கூட்டணி ஏற்கனவே 42.2 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. ஆனால், இந்த தேர்தலில் அது 37.22 சதவீதமாக குறைந்து விட்டது. அதே சமயம், பா.ஜ.க. வென்ற 64ல் 18 தொகுதிகளில் அதிகமான வாக்குகளை பெற்றிருக்கிறது.
இந்த சூழ்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் தங்கள் வாக்குகளை கணக்கிட்டு ஆய்வு செய்து வருகின்றன. இரு கட்சிகளுக்கும் இடையே இந்த தேர்தலில் வாக்கு பரிமாற்றம் சரியாகவே நடக்கவில்லை என்று தெரிய வருவதால், கூட்டணியை முறித்து கொள்ளவும் இவை ஆலோசித்து வருகின்றன. எனினும், மாநிலத்திலும், மத்தியிலும் பா.ஜ.க. அரசு பலமாக அமர்ந்துள்ளதால், தற்போதைக்கு கூட்டணியாக அவற்றை எதிர்கொள்ளலாம். தேர்தல் நெருங்கும் போது பிரிந்து கொள்ளலாம் என்றும் ஆலோசித்து வருகின்றன. எனினும், தங்கள் வாக்கு வங்கியை மீண்டும் காப்பாற்றிக் கொள்ள இரு கட்சிகளுமே கூட்டணியை முறித்து கொள்ள விரும்புவதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன.