சந்திரபாபுவை அழைத்த ஜெகன் ஸ்டாலினை அழைக்காத மோடி

Jagan invites Chandrababu for swearing-in ceremony, modi not invited stalin

by எஸ். எம். கணபதி, May 28, 2019, 20:13 PM IST

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு வருமாறு தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு வரவில்லை. அதே சமயம், ஆந்திராவில் தனக்கு நேர் எதிரியான சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் அழைத்துள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி.

தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. போட்டியிட்டது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டது. தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ. கூட்டணிக்கு எதிராக மக்கள் வாக்களித்தனர். அந்த அணி ஒரேயொரு தொகுதியாக தேனியில் மட்டுமே வென்றது. மீதி 37 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணியே வென்றது. வேலூரில் தேர்தல் நடக்கவில்லை.

இந்த நிலையில், மத்தியில் பா.ஜ.க. 303 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரும் 30ம் தேதி இரவு 7 மணிக்கு பதவியேற்றுக் கொள்கிறார். ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள அத்தனை கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இது தவிர, ஆன்மீக அரசியல் பேசும் நடிகர் ரஜினிகாந்த், பா.ஜ.க.வின் ‘பி’ டீம் என்று தி.மு.க.வினரால் தேர்தலின் போது விமர்சிக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மொத்தம் 23 எம்.பி.க்களுடன் நாடாளுமன்றத்தில் 3வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள தி.மு.க.வின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இது குறித்து தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு கூறுகையில், ‘‘பிரதமர் பதவி ஏற்கும் விழாவிற்கு தி.மு.க.வுக்கு அழைப்பு வந்ததாக கூறப்படும் செய்தி உறுதிப்படுத்தப்படாத தகவல். பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க இது வரை அழைப்பு வரவில்லை. குடியரசு தலைவரிடம் இருந்தோ, பிரதமரிடம் இருந்தோ எந்தவொரு அழைப்பும் வரவில்லை’’ என்றார். ‘இனிமேல் அழைப்பு வந்தால் கலந்து கொள்வீர்களா?’’ என்று கேட்டதற்கு, ‘அது குறித்து தலைமைதான் முடிவெடுக்கும்’‘ என்றார்.

மோடி பதவியேற்கும் விழா நடைபெறும் அதே 30ம் தேதி காலையில் விஜயவாடாவில் ஆந்திராவின் புதிய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்கிறார். அந்த பதவியேற்பு விழாவுக்கு முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஜெகன் அழைப்பு விடுத்துள்ளார். அதுவும் அவரே தொலைபேசியில் நாயுடுவை தொடர்பு கொண்டு தனது பதவியேற்பு விழாவுக்கு அழைத்ததாக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தனைக்கும், நாயுடுவும், ஜெகனும் நேற்று வரை கடுமையாக மோதிக் கொண்டவர்கள். தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் 23 பேரை இழுத்து கொண்ட நாயுடுவுக்கு ஆண்டவன் நல்ல தண்டனை கொடுத்து விட்டான் என்று ஜெகன் மோகன் ரெட்டி வெற்றி பெற்ற பிறகு கூட பேசினார். ஆனாலும், அரசியல் நாகரீகம் கருதி நாயுடுவை பதவியேற்பு விழாவுக்கு அழைத்துள்ளார். ஆனால், எதிரணி தலைவர் என்பதை விட நாடாளுமன்றத்தில் 3வது பெரிய கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் ஸ்டாலினுக்கு பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்திருக்க வேண்டும். முதல்வருக்கு அழைப்பு விடுக்கும் போதே அவருக்கும் அழைப்பு விடுத்திருக்கலாம். ஒரு வேளை கடைசி நேரத்தில் அழைப்பு விடுப்பார்களா என்பது தெரியவில்லை.

You'r reading சந்திரபாபுவை அழைத்த ஜெகன் ஸ்டாலினை அழைக்காத மோடி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை