நடிகை டாப்ஸி லீடு ரோலில் நடிக்கும் கேம் ஓவர் படத்தின் டிரைலர் வரும் மே 30ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது.
நயன்தாரா நடிப்பில் வெளியான ஹாரர் படமான மாயா படத்தை இயக்கியவர் அஷ்வின் சரவணன். அவர் இயக்கத்தில் டாப்ஸி லீடு ரோலில் நடித்துள்ள கேம் ஓவர் திரைப்படம் வரும் ஜூன் 14ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில், படத்தின் புரமோஷன் வேலையில் படுபிசியாகி உள்ள நடிகை டாப்ஸி, வரும் மே 30ம் தேதி படத்தின் டிரைலரை வெளியிட முடிவு செய்துள்ளார்.
தமிழில் நடிகர் தனுஷ் கேம் ஓவர் டிரைலரை மே 30ம் தேதி மதியம் 1 மணிக்கு சமூக வலைதளத்தில் வெளியிடுகிறார். ஆடுகளம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகத் தான் டாப்ஸி அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு டிரைலரை பாகுபலி வில்லன் ராணா டகுபதி வெளியிடுகிறார். இந்தி டிரைலரை நடிகை டாப்ஸியே வெளியிடுகிறார். முன்னதாக இயக்குநர் அனுராக் காஷ்யாப் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசியில் டாப்ஸியே இந்தி டிரைலரை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.