மோடி பதவியேற்பு விழாவை கோட்டை விட்ட 2 முதல்வர்கள்

When a late lunch forced 2 Chief Ministers to miss PM Modis oath event

by எஸ். எம். கணபதி, May 30, 2019, 19:12 PM IST

மதிய உணவு சாப்பிட்டு முடிக்க காலதாமதம் ஆனதால், பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு போக முடியாமல் கோட்டை விட்டனர் இரண்டு முதல்வர்கள். ஆச்சரியமாக உள்ளதா?

ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சியை வீழ்த்தி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. மொத்தம் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் 152 இடங்களை அந்த கட்சி பிடித்தது. அமோக வெற்றி பெற்ற இந்த கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, முதலமைச்சராக இன்று பதவியேற்றார்.

நல்ல நேரம் பார்த்து பகல் 12.23 மணிக்கு பதவியேற்பு விழா நடத்தப்பட்டது. விஜயவாடாவில் நடைபெற்ற விழாவில் ஜெகன்மோகன் ரெட்டிக்கும், அமைச்சர்களுக்கும் ஆந்திர கவர்னர் நரசிம்மன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பதவியேற்பு விழா முடிந்ததும் சந்திரசேகர ராவும், ஜெகன்மோகன் ரெட்டியும் இணைந்து தனி விமானத்தில் டெல்லிக்கு சென்று இரவு 7 மணிக்கு நடைபெறும் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடிவு செய்திருந்தனர்.

இதற்கிடையே, விஜயவாடாவில் பதவியேற்பு விழா முடிந்ததும் சந்திரசேகர ராவ், ஸ்டாலின் உள்ளிட்டவர்களை, விஜயவாடாவில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள தனது சொந்த ஊரான தடேபள்ளிக்கு ஜெகன் அழைத்து சென்றார். அங்கு அவரது வீட்டில் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. மதிய உணவு சாப்பிட்டு முடிக்கும் போது பிற்பகல் 2.30 மணி ஆகி விட்டது.

இதைத் தொடர்ந்து, ஜெகனும், சந்திரசேகரராவும் டெல்லிக்கு புறப்படுவதாக இருந்தது. ஆனால், டெல்லியில் மோடி பதவியேற்பு விழா இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளதால், பாதுகாப்பு கருதி மாலை 6 மணிக்கு மேல் தனி விமானங்கள் இறங்க அனுமதியில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதனால், ஜெகனும், ராவும் வழக்கமான பயணிகள் விமானத்தில்தான் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், அந்த விமானத்தை பிடித்தாலும் அது டெல்லிக்கு 6.45 மணிக்குத்தான் போய் சேரும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்காரணமாக, அவர்கள் இருவரும் மோடி பதவியேற்பு விழாவை கோட்டை விட வேண்டியதாயிற்று என்று ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.

You'r reading மோடி பதவியேற்பு விழாவை கோட்டை விட்ட 2 முதல்வர்கள் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை