பா.ஜ.க.வின் அமோக வெற்றியைத் தொடர்ந்து, பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றார். மேலும், 24 கேபினட் அமைச்சர்கள் மற்றும் தனிப்பொறுப்பு இணையமைச்சர்கள் 9 பேரும், இணையமைச்சர்கள் 24 பேரும் பதவியேற்றனர். பிரதமரை சேர்க்காமல் மொத்தம் 57 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த பதவியேற்பு விழா, ஜனாதிபதி மாளிகையில் மே30ம் தேதி புல்வெளியில் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் சுமார் 6 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் நடத்திய கலவரங்களில் இறந்த பா.ஜ.க. தொண்டர்களின் குடும்பத்தினர் என்று 54 பேரை இந்த விழாவுக்கு அழைத்திருந்தனர். அது மட்டுமல்ல. பா.ஜ.க. வெற்றி பெற்று பதவியேற்கும் முன்பே திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் மற்று்ம் 56 கவுன்சிலர்களை பா.ஜ.க.விற்கு இழுத்தனர். இதனால், மோடி பதவியேற்பு விழாவுக்கு வருவதாக சொன்ன மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் தலைவருமான மம்தா பானர்ஜி திடீரென புறக்கணித்தார்.
அதே போல், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத்பவாரும், மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணித்தார். முன்பெல்லாம் மோடிக்கு சரத்பவாரை மிகவும் பிடிக்கும். அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாக விழாக்களில் குறிப்பிடுவார். ஆனால், இப்போது மோடியின் பதவியேற்பு விழாவில் பவாருக்கு உரிய இடம் தரப்படவில்லையாம். அதனால்தான், அவர் விழாவுக்கு வரவில்லையாம்.
இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், ‘‘மகாராஷ்டிரா முதலமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றிய பவார் ஒரு மூத்த தலைவர். ஆனால், அவருக்கு மோடியின் பதவியேற்பு விழாவில் ஆறாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்தது. அதனால்தான், அவர் அந்த விழாவுக்கு செல்லவில்லை’’ என்று தெரிவித்தார்.