உலகக் கோப்பை கிரிக்கெட்... முதல் போட்டியில் இங்கிலாந்து அபாரம்

World Cup cricket, England beat s.africa in the opening match at oval:

by Nagaraj, May 31, 2019, 09:06 AM IST

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தெ.ஆப்பிரிக்க அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் வெற்றியை ருசித்தது இங்கிலாந்து அணி .

10 நாடுகள் பங்கேற்கும் 12-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நேற்று தொடங்கியது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணியும், தெ.ஆப்பிரிக்க அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இதில், டாஸ் வென்ற தெ.ஆப்ரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் பேரிஸ்டோவ் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஆனாலும், இங்கிலாந்து அணியின் ராய்(54), ரூட்(51), மோர்கன்(57) மற்றும் ஸ்டோக்ஸ்(89) ஆகியோர் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தனர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 311 ரன்களை குவித்தது. தெ.ஆப்ரிக்க அணி தரப்பில் நிகிடி 3 விக்கெட் சாய்த்தார்.

வெற்றிக்கு 312 ரன்கள் தேவை என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கியது தெ.ஆப்ரிக்கா அணி. தொடக்கத்திலே இங்கிலாந்தின் ஆர்ச்சர் பந்துவீச்சில் தலையில் அடிபட்டு தென் ஆப்ரிக்க வீரர் ஆம்லா ரிட்டையர் ஹர்ட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த மார்க்ரம் 13, கேப்டன் டு பிளிசிஸ் 5 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். டி காக், துசென் ஜோடி சற்று நேரம் தாக்குப் பிடித்தது. டி காக் 68 ரன் எடுத்து அவுட் ஆனார். துசென் 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.

எதிர்பார்க்கப்பட்ட டுமினி 8 ரன்னில் நடையைக் கட்டினார். பெலுக்வயோ சற்று நேரம் தாக்குப் பிடித்து 24 ரன் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் தென்னாப்ரிக்கா அணி 39.5 ஓவரில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் ஆர்ச்சர் 3 விக்கெட் சாய்த்தார். பிளங்கட், ஸ்டோக்ஸ் தலா இரண்டு விக்கெட் சாய்த்தனர். உலகக் கோப்பை போட்டியில் சொந்த மண்ணில் விளையாடிய முதல் போட்டியில் முதல் வெற்றியை ருசித்த சந்தோஷத்தில் இங்கிலாந்து அணி உள்ளது.

You'r reading உலகக் கோப்பை கிரிக்கெட்... முதல் போட்டியில் இங்கிலாந்து அபாரம் Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை