ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட தீர்மானத்தின் நிலை என்னவென்று 2 வாரங்களுக்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். ஆயுள்தண்டனை காலம் முடிவடைந்ததால், தங்களை விடுவிக்க வேண்டுமென்று கோரி பேரறிவாளன் உள்பட 7 பேர் கோரிக்கை விடுத்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு பல்வேறு திருப்பங்களை கடந்து, உச்ச நீதிமன்றம் வரை சென்று திரும்பியது. உச்ச நீதிமன்றம் கடைசியாக இந்த விஷயத்தில் தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று கருத்து தெரிவித்திருந்தது.
இதன்பின், ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்று கடந்த 2014ம் ஆண்டில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அது ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், குற்றவாளிகள் ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், நிர்மல்குமார் ஆகியோர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆளுநருக்கு அனுப்பப்பட்ட தீர்மானத்தின் நிலை குறித்து பதிலளிக்க 2 வார கால அவகாசம் கோரினார்.
இதை ஏற்ற நீதிபதிகள், அரசு பதலளிக்க 2 வார கால அவகாசம் அளித்து விசாரணையை தள்ளி வைத்தனர். இதற்கிடையே தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி நளினி ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கு நீதிபதி சுப்பையா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.