அமெரிக்காவிடம் இருந்து ரூ.17,500 கோடிக்கு 24 நவீன ஹெலிகாப்டர்களை (Lockheed Martin-Sikorsky MH-60R) மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் அக்டோபர்-நவம்பரில் போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசில், பாதுகாப்பு துறை அமைச்சராக ராஜ்நாத்சிங் பொறுப்பேற்றுள்ளார். ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளுக்கும் நவீன ஆயுதங்கள், வாகனங்கள் போன்றவை வாங்கி நவீனப்படுத்த அரசு தி்ட்டமிட்டுள்ளது.
இந்த வகையில், கடற்படைக்கு 24 நவீன ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர்கள், கடலுக்கு அடியில் இருக்கும் நீர்மூழ்கி கப்பல்கள், போர்க்கப்பல்களை கண்காணித்து பல்வேறு விதமான செயல்பாடுகளுக்கு பயன்படும். இந்த ஹெலிகாப்டர்களை அமெரிக்க அரசிடம் இருந்து இந்திய அரசு நேரடியாக வாங்கும்.
அமெரிக்காவின் ‘வெளிநாட்டு ராணுவ விற்பனை’ என்ற திட்டத்தின் கீழ் நவீன ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்க அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக தெரிகிறது. இது குறித்து கடற்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கடற்படையில் ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட Sea King 42/42A என்ற ஹெலிகாப்டர்களுக்கு மாற்றாக தற்போது நவீன ஹெலிகாப்டர்கள் வாங்கப்படுகின்றன.
சுமார் ரூ.17,500 கோடியிலான இந்த விற்பனைக்கு அமெரிக்காவிடம் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஒப்பந்தம் போடப்படலாம். ஒப்பந்தம் போட்ட 18 மாதங்களுக்கு பிறகு ஹெலிகாப்டர்கள் வந்து சேரும். அனேகமாக, 2022ம் ஆண்டில் இந்த நவீன ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படையின் பயன்பாட்டுக்கு வரும்’’ என்று தெரிவித்தார்.