அ.ம.மு.க. லெட்டர்பேடு கட்சி ஜெயக்குமார் கிண்டல்

Many cadres from TTV party will join admk soon

by எஸ். எம். கணபதி, Jun 6, 2019, 09:30 AM IST

‘‘அ.ம.மு.க. கட்சி இப்போது லெட்டர் பேடு கட்சியாகி விட்டது. கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி, அது சிற்றெறும்பாகி காணாமல் போய் விட்டது’’ என்று அமைச்சர் ஜெயக்குமார் நக்கலாக கூறியுள்ளார்.

 


நாடளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஒரேயொரு இடத்தில் தட்டுத்தடுமாறி வெற்றி பெற்றுள்ளது. இந்த பெரும் தோல்விக்குப் பின்னர், அ.தி.மு.க. அமைச்சர்கள், தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வை திட்டுவதை விட மிக அதிகமாக டி.டி.வி.

 

தினகரனைத்தான் திட்டுகிறார்கள். காரணம், திருச்சி, தேனி, சிவகங்கை உள்ளிட்ட நான்கைந்து தொகுதிகளில் தினகரனின் அ.ம.மு.க. கட்சி, சுமார் ஒரு லட்சம் வாக்குகளை பெற்றிருக்கிறது. மொத்தத்தில் 5 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்கிறது. இந்த வாக்குகள் பெரும்பாலும் அ.தி.மு.க. வாக்குகள் என்பதால், அ.தி.மு.க.வினருக்கு தினகரன் மீதான கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது.


இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், ‘‘அ.ம.மு.க. ஒரு கட்சியே இல்லை. அது ஒரு குழுதான். அதாவது, ஒரு லெட்டர்பேடு கட்சி. கழுதை தேய்ந்த கட்டெறும்பாகி, அது சிற்றெறும்பாகி, அந்த சிற்றெறும்பும் கூட இப்போது காணாமல் போய் விட்டது. கடலில் கரைத்த பெருங்காயம் போன்று அ.ம.மு.க.வின் நிலை பரிதாபமாகி விட்டது.


அ.தி.மு.க.வில் ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாக தினகரன் பேசினார். ஆனால், இப்போது தினகரனே அவரது கட்சிக் கூட்டத்தில், ‘நம்ம கட்சியில்தான் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள். இங்கிருந்து போக நினைப்பவர்கள் போய் விடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். அதனால், அங்கிருப்பவர்கள் அ.தி.மு.க.வுக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள்.

 

இன்னும் நிறைய பேர் வருவார்கள்’’ என்று கூறியுள்ளார்.

You'r reading அ.ம.மு.க. லெட்டர்பேடு கட்சி ஜெயக்குமார் கிண்டல் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை