மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது .இதில் தேர்ச்சி அடைய முடியாத விரக்தியில் தமிழகத்தில் இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவப் படிப்பில் சேருவதற்கு நாடு முழுவதுக்கும் ஒரே மாதிரியான நீட் என்னும் நுழைவுத் தேர்வு முறையை மத்திய அரசு 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்தது.இந்த நீட் தேர்வால், தமிழக மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். நீட் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஆண்டிலேயே, +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும், நீட் துழைவுத் தேர்வில் வெற்றி முடியாத சோகத்தில் அரியலூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த சோகச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, இன்னும் மறந்த பாடில்லை.
அரியலூர் அனிதா தற்கொலையால், தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலின் போது கூட, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும் என பிரதான கட்சிகள் பலவும் வாக்குறுதிகளாக கொடுத்தன.
இந்நிலையில் இந்தாண்டு மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக, நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியானது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 48.57% பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைக் காட்டிலும் 9 சதவீதம் அதிகம் என்றாலும் தேசிய அளவில் முதல் 50 இடங்களுக்குள் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் கூட இடம் பெறவில்லை.
இந்நிலையில் இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சியடையாததால், தமிழகத்தை சேர்ந்த இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகளான மாணவி ரித்துஸ்ரீ என்பவர் தேர்வில் தேர்ச்சி பெறமுடியவில்லை என்ற வேதனையில் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.
+2 வகுப்பில் 490 மதிப்பெண்கள் எடுத்திருந்த நிலையில், நீட் தேர்வில் ஒரே ஒரு மதிப்பெண்ணில் ரித்து ஸ்ரீ தோல்வியுற்றார். இதனால் விரக்தியடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவத்தால் மாணவியின் பெற்றோர் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இதே போல் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த வைஷியா என்ற மாணவி வீட்டில் தீக்குளித்து தற்கொலை கொண்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியான முதல் நாளிலேயே, தோல்வியடைந்த விரக்தியில் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.