மும்மொழிக் கொள்கைக்கு தமிழக அரசு ஆதரவா..? கண்டனக் குரல் எழுந்ததால் டுவிட்டர் பதிவை நீக்கிய எடப்பாடி

TN cm cm edappadi Palani Samy deleted his tweet on language policy

by Nagaraj, Jun 5, 2019, 21:32 PM IST

இந்தியாவின் பிற மாநிலங்களில் தமிழ் மொழியை விருப்ப மொழியாக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டுவிட்டரில் கோரிக்கை விடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.மும்மொழிக் கொள்கையை ஏற்று புறவாசல் வழியாக இந்தித் திணிப்புக்கு தமிழக அரசு கதவைத் திறந்து விடும் முயற்சி என்று பல்வேறு தரப்பிலும் கண்டனக் குரல் எழுந்ததைத் தொடர்ந்து, தனது டிவிட்டர் பதிவை பதிவிட்ட 4 மணி நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி நீக்கி விட்டார்.

மத்திய அரசின் புதிய கல்வி வரைவுத் திட்டத்தில், இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை 3-வது பாடமாக்கும் மும்மொழி கொள்கைத் திட்டம் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்தது. தமிழக அரசுத் தரப்பிலும், தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் அமலில் இருக்கும் என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தி மொழி கட்டாயமில்லை என மும்மொழிக் கொள்கை திட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது மத்திய அரசு .

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று, பிரதமர் மோடிக்கு கோரிக்கை ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதில் இந்தியாவின் பிற மாநிலங்களில் தமிழ் மொழியை விருப்ப மொழியாக மாற்ற வேண்டும். தமிழ் மொழியை விருப்பமொழியாக அறிவித்தால் உலகின் மிக தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழுக்கு சிறந்த சேவையாக அமையும் என மரியாதைக்குரிய பிரதமர் மோடியை கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த டிவிட்டர் பதிவு, மும்மொழிக் கொள்கையை அதிமுக அரசு ஆதரிக்கிறதா? என்ற கேள்வியுடன் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்திருந்த திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி,
மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கும் அடிமை சாசனத்தில் எடப்பாடி அரசு கையெழுத்திட தயாராகிவிட்டது போல் தெரிகிறது. மறைமுகமாக மும்மொழி கொள்கையை எடப்பாடி ஆதரித்துள்ளார்.

இருமொழிக் கொள்கையால் தான் தமிழகம் வளர்ச்சி பெற்றுள்ளது. திமுக கொள்கையும் இரு மொழிக் கொள்கைதான் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருந்தார்.

முதல்வர் எடப்பாடியின் கருத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யும் கண்டனம் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் ஒருபோதும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தி மொழியை மூன்றாவது மொழியாக தமிழகத்தில் ஏற்றுக்கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புறவாசல் கதவை திறக்க முயல்கிறார் என்றும் திருமாவளவன் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தன்னுடைய டிவிட்டர் பதிவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பும், கண்டனக் குரல்களும் எழுந்த நிலையில், அந்தப் பதிவை திடீரென நீக்கி, மும்மொழிக் கொள்கை குறித்த தனது கருத்திலிருந்த பின் வாங்கியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி .

You'r reading மும்மொழிக் கொள்கைக்கு தமிழக அரசு ஆதரவா..? கண்டனக் குரல் எழுந்ததால் டுவிட்டர் பதிவை நீக்கிய எடப்பாடி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை