மத்திய அமைச்சர் பதவி கிடைக்காதா என்று அ.திமு.க. அமைச்சர்கள் பந்திக்கு வெளியே ஏங்குவது போல கிண்டலடித்து பா.ஜ.க. ஆதரவு துக்ளக் பத்திரிகையில் ஒரு கார்ட்டூன் வெளியிட்டிருந்தனர். அதற்கு பதிலடியாக, அ.தி.மு.க.வின் நாளேட்டில், ‘தூக்கில் தொங்கும் துர்நாற்ற பத்திரிகை’ என்று கடுமையாக தலையங்கம் எழுதியிருக்கிறார்கள்.
சோ மறைவுக்கு பிறகு, துக்ளக் ஆசிரியராக பா.ஜ.க.வின் தீவிர அனுதாபியும், பிரதமர் மோடியின் நண்பருமாகிய ஆடிட்டர் குருமூர்த்தி பொறுப்பேற்றார். அதற்கு பிறகு, அ.தி.மு.க.வைப் பற்றி குருமூர்த்தி அவ்வப்போது கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். ‘டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிமுகவினர் ஆண்மையற்றவர்கள்’ என்று ஒரு முறை கருத்து கூறினார். அதற்கு அமைச்சர்கள் பதில் கொடுத்தாலும், காட்டமாக பதிலளிக்கவில்லை.
இந்நிலையில், தமிழகத்தில் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் வென்ற ஒரே எம்.பி.யான ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்துக்கு மோடி அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என்று பரவலாக பேசப்பட்டது. மோடி பதவியேற்பு விழா துவங்குவதற்கு முன்பு இந்த பேச்சு ஓடியது. கடைசியில் அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு வாய்ப்பு தரப்படவே இல்லை.
இதையடுத்து, மத்திய அமைச்சர் பதவிக்கு ஏங்கிய அ.தி.மு.க.வுக்கு அது கிடைக்கவில்லை என்பதை கிண்டலாக துக்ளக் பத்திரிகையில் கார்ட்டூன் வரைந்திருந்தார்கள். அதில், கல்யாண மண்டபத்தில் பந்தி நடைபெற்று கொண்டிருக்கும் அறைக்கு வெளியே ஓ.பி.எஸ், அவரது மகன் உள்ளிட்டோர் நின்று பந்தியை பார்ப்பது போல் படம் வரையப்பட்டிருந்தது. மேலும், ஓ.பி.எஸ், ‘‘உஸ்ஸ்... யாரும் அழப்படாது. நம்பளையெல்லாம் உள்ளே கூப்பிட மாட்டாங்க. ஏதாவது மீந்துச்சுன்னா குடுப்பாங்க. அப்ப சாப்பிடுவோம்’ என்று சொல்வது போல நக்கலடிக்கப்பட்டிருந்தது.
இதற்கு அ.தி.மு.க.வின் நாளேடான நமது அம்மா பத்திரிகையில் பதிலடி கொடுத்து, கடுமையாக தலையங்கம் எழுதியிருக்கின்றனர். அதில், ‘தூக்கில் தொங்கும் துர்நாற்ற பத்திரிகை துக்ளக்’ என்று விமர்சித்திருக்கிறார்கள்;
‘‘துக்ளக் பத்திரிகை தொடர்ந்து கழகத்தின் மீது தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறதே?’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அந்த தலையங்கம் வருமாறு:
பா.ஜ.க. அமைச்சர்கள் மட்டும் உள்ளே உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருப்பதாகவும், கழகம் வெளியே நின்ற சாப்பிடுவதற்கு ஏங்குவதாகவும் ஒரு கார்ட்டூனை வரைந்திருக்கிறது துக்ளக். பொது வாழ்க்கை என்பது சேவையாற்றுவது. ஆனால், இதற்கு பதிலாக சாப்பிடுவதே அரசியல் என்பது போல துக்ளக் தீட்டியிருக்கும் கார்ட்டூன் பா.ஜ.க அமைச்சர்களைத்தான் மலிவாக சித்தரித்து அவர்களின் நேர்மையை களங்கப்படுத்தி இருக்கிறது.
கூடவே அதிகாரத்திற்கு ஏங்குவது போல அ.தி.மு.க.வை அப்பத்திரிகை விமர்சித்திருக்கிறது. கழகம் தொடங்கப்பட்டு 42 வருடங்களில் ஏறத்தாழ 30 வருடங்களுக்கும் மேலாக அதிகாரத்தில் அமர்ந்து ஆட்சியில் இருந்து கொண்டே வெற்றி பெற்று அரசியல் புரட்சியை தமிழகத்தில் நடத்தியுள்ளது. அ.தி.மு.க. ஒருபோதும் மத்திய அரசின் அதிகாரங்களுக்கு மல்லுக்கு நின்றதில்லை. மண்டியிட்டு கிடந்ததும் இல்லை என்பதே வரலாறு
ஆனால், இதையெல்லாம் அறியாதவர்கள் போல கழகத்தின் அமைச்சர்களை இம்பொட்டன்ட் என்றும் பந்திக்கு அலைகிறவர்கள் என்றும் ஒரு குரூரத்தோடு ஆடிட்டர் குருமூர்த்தி ஆசிரியராக பொறுப்பேற்ற பின்பு துக்ளக் பத்திரிகை தொடர்ந்து கழகத்தையும், கழகத்தின் அமைச்சர்களையும் தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறது. சோ நடத்திய பாரம்பரிய பத்திரிகை, இப்போது நாளெல்லாம் பெட்டிக்கடைகளில் வாசிப்பதற்கு ஆள் இல்லாமது தூக்கில் தொங்குகிற துர்நாற்ற பத்திரிகையாக மாறி விட்டது என்பதைத்தான் காட்டுகிறது. அதனால், இது போன்ற நாலாந்தர விமர்சனங்களுக்கு கழகத்து சிப்பாய்கள் செவி மடுக்காமல் கடந்து போவது ஒன்றே அவர்களுக்கு நாம் தரும் பதிலாக இருக்க வேண்டும்.
இவ்வாறு தலையங்கத்தில் கூறப்பட்டிருக்கிறது.
தற்போது பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே கூட்டணி உறவில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. இரண்டு கட்சியிலுமே தோல்விக்கு யார் காரணம் என்ற விவாதம் மட்டுமின்றி, தனித்து போக வேண்டும் என்ற பேச்சும் அதிகரித்துள்ளது.