நிதி ஆயோக்கினால் பலனில்லை கூட்டத்தை புறக்கணிக்கும் மம்தா

Its Fruitless: In a Letter to PM Modi, Mamata Banerjee Refuses to Attend Niti Aayog Meeting

by எஸ். எம். கணபதி, Jun 7, 2019, 13:20 PM IST

நிதி ஆயோக் அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்வதால் எந்த பலனும் இல்லை என்பதால், நான் அதில் கலந்து கொள்ள மாட்டேன் என்று பிரதமர் மோடிக்கு மம்தா கடிதம் அனுப்பியுள்ளார்.

திரிணாமுல் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தொடர்ந்து பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறார். காரணம், நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் 18 இடங்களை கைப்பற்றிய பா.ஜ.க, ஆளும் திரிணாமுல் கட்சிக்கு தொல்லை கொடுத்து வருகிறது.

இந்நிலையில், பிரதமரின் பதவியேற்பு விழாவுக்கு வருவதாக சொன்ன மம்தா திடீரென புறக்கணித்தார். தற்போது பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் அமைப்பின் பொது குழு கூட்டம் வரும் 15ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இக்குழுவில் மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச கவர்னர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளனர்.

இந்தக் குழு, அனைத்து மாநிலங்களிலும் நிறைவேற்ற வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்கும். இதற்கு நேரு காலத்தில் இருந்து திட்டக்குழு செயல்பட்டு வந்தது. அந்த குழு மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை ஆராய்ந்து அதற்கு ஏற்ப மாநிலங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும்.

கடந்த முறை பிரதமராக மோடி பதவியேற்றதும், இந்த திட்டக் குழு கலைக்கப்பட்டு நிதி ஆயோக் கொண்டு வரப்பட்டது. இந்த நிதி ஆயோக் கிட்டத்தட்ட திட்டக்குழுவை போல், முக்கிய தேவைகள் குறித்து விவாதித்தாலும் நிதி பரிந்துரை செய்யாது.
இந்த சூழலில், வரும் 15ம் தேதி கூடும் நிதி ஆயோக் கூட்டத்தில் நீர்மேலாண்மை, விவசாயம், பாதுகாப்பு ஆகிய முக்கிய விஷயங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்த கூட்டத்தை புறக்கணிக்கும் மம்தா, பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில், ‘‘நிதி ஆயோக் அமைப்பிற்கு, மாநில திட்டங்களுக்கு நிதி ஆதரவு அளிக்கும் அதிகாரம் இல்லாததால், இதன் கூட்டத்தில் கலந்து கொள்வதால் எந்த பலனும் ஏற்படாது. எனவே, என்னால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது’’ என்று கூறியுள்ளார்.

You'r reading நிதி ஆயோக்கினால் பலனில்லை கூட்டத்தை புறக்கணிக்கும் மம்தா Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை