தமிழகத்தில் ஆளும் அதிமுகவில் உள்கட்சி மோதல் பகிரங்கமாக வெடித்துள்ள நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் திடீர் டெல்லிப் பயணம் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுவிட்டது. கட்சியையும், ஆட்சியையும் சசிகலா கைப்பற்ற முயல, தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ் தனி அணி அமைத்தார். சசிகலா வோ முதல்வராக முடியாமல் சிறைக்கு செல்ல, எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக்கப்பட்டார். பின்னர் சசிகலா, டிடிவி தினகரன் கூட்டத்தை ஓரம் கட்டி ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்தனர்.ஆட்சிக்கு எடப்பாடி, கட்சிக்கு ஓபிஎஸ் என்று தலைமை வகித்தாலும், இரு தரப்புமே இதுவரை தனித்தனி குரூப்பாகவே செயல்பட்டு வருவது அம்பலமாகி விட்டது.
இடையிடையே எத்தனை சோதனைகள் வந்தாலும், எப்படி,எப்படியோ சமாளித்து 2 வருடத்திற்கும் மேலாக ஆட்சியை தக்க வைத்து வருகின்றனர். அதிமுக ஆட்சி நீடிக்க, டெல்லி பாஜக தரப்பு முட்டுக் கொடுத்து வந்ததும் ஒரு காரணம்.
ஆனால், பாஜக, பாமக, தேமுதிக கட்சிகளுடன் கூட்டணி வைத்தும் மக்களவைப் பொதுத் தேர்தலில் அதிமுகவுக்கு ஏற்பட்ட படுதோல்வி அக் கட்சிக்குள் மீண்டும் ஒரு பிரளயத்தை ஏற்படுத்திவிட்டது என்றே கூறலாம்.
மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு அமைச்சர் பதவி ஒதுக்கும் விஷயத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மீண்டும் மோதல் வெடித்து விட்டதாக தெரிகிறது. தனது மகனுக்கு மந்திரி பதவி கேட்டு ஓபிஎஸ், டெல்லியில் தனி லாபி செய்ய, எடப்பாடி முட்டுக்கட்டை போட , இப்போது இருவருமே தனித்தனி ரூட்டில் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர் என்று கட்சியினரே புலம்பத் தொடங்கி விட்டனர்.
ஏனெனில் டெல்லியில், அதிமுக சார்பில் அமைச்சர் யார்? என்பதில் இரு தரப்புமே பிடிவாதம் காட்ட, யாருக்கும் அமைச்சர் பதவி இல்லை டெல்லி பாஜக கைவிரித்து விட்டது. இதனால் பிரதமர் மோடியின் அமைச்சரவை பதவியேற்பு பிடித்து வெறுங்கையுடன் திரும்பிய ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே இப்போது ஒன்று சேராமல் பிரிந்துள்ளனர்.
பல் வலி என காரணம் காட்டி சென்னை வீட்டில் முடங்கிய எடப்பாடி, பின்னர் சேலம் விழாவுக்கு சென்றவர் அங்கேயே கேம்ப் அடித்துள்ளார்.
இதனைப் பயன்படுத்திக் கொண்டு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமோ, திடீர் விஸ்வரூபம் எடுத்தது போல் சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தை அடிக்கடி நடத்த ஆரம்பித்து விட்டார். இந்நிலையில் இவர்கள் இருவருன் தனித்தனி ௹ட்டால் ஏற்பட்ட அதிருப்தி தான் மதுரை எம்எல்ஏ ராசன்செல்லப்பாவின் போர்க்கொடிக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற ராசன்செல்லப்பாவின் கோஷத்திற்கு குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன் ஒருவர் மட்டுமே இப்போதைக்கு ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார். ஒட்டு மொத்த அமைச்சர்களும் இப்போதைய எடப்பாடி ஆட்சிக்கும், கட்சிக்கும் எந்த ஆபத்தும் இல்லை என்று கூறினாலும், ஏதோ பூகம்பம் வெடிக்கப் போகிறது என்ற பதைபதைப்பில் உள்ளனராம்.
ராசன்செல்லப்பா, ராமச்சந்திரன் ஆகியோர் வரிசையில், அதிமுக தலைமைக்கு எதிராக மேலும் பல எம்எல்ஏக்கள் எந்த நேரத்திலும் போர்க் குரல் உயர்த்தலாம் என்ற தகவல்கள் கசிந்து வருகிறதாம்.இதனாலேயே அவசர, அவசரமாக எம்எல்ஏ ,எம்.பிக்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை 12-ந் தேதி அவசரமாக கூட்டியுள்ளதாகவும், இனிமேல் யாரும் பொதுவெளியில் பேசக் கூடாது என கட்டுப்பாட்டை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிமுகவில் இப்படிப்பட்ட குழப்பங்கள் நிலவி வரும் சூழ்நிலையில் தான்,தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் இன்று காலை திடீரென டெல்லிக்கு பயணமாகியுள்ளார். டெல்லியில் இன்று பிற்பகல் உள்துறை அமைச்சர் அமித்ஷா வை சந்திக்கும் கவர்னர், பின்னர் பிரதமர் மோடியையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை விவகாரம் குறித்து கவர்னர் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்டாலும், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் டெல்லியில் கவர்னர் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.