சவுக்கிதார் பாக்யராஜ் அணிக்கு பின்னணியில் எந்த அரசியல் கட்சி?

No politics in actors association election, Nasar and Bhakyaraj said.

by எஸ். எம். கணபதி, Jun 10, 2019, 10:39 AM IST

நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் எதுவும் கலக்கவில்லை என்று தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசரும், பாக்யராஜூம் மறுத்துள்ளனர்.

தென்னிந்திய நடிகர்சங்கத் தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் கடந்த 7ம் தேதி தொடங்கியது. மனுதாக்கல் செய்வதற்கு இன்று(10ம் தேதி) கடைசி நாள். சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்.-ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் 23ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.

கடந்த தேர்தலில் வென்ற விஷால் அணி இந்த தேர்தலிலும் போட்டியிடுகிறது. தலைவர் பதவிக்கு நாசர், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, துணைத் தலைவர் பதவிகளுக்கு கருணாஸ், பூச்சிமுருகன் போட்டியிடுகின்றனர். இந்த அணிக்கு எதிராக யாரும் போட்டியிடுவார்களா என்பதே தெரியாமல் இருந்தது.

திடீர் திருப்பமாக, டைரக்டர் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணி உதயமானது. இந்த அணியில் தலைவர் பதவிக்கு நாசரை எதிர்த்து பாக்யராஜ், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு கார்த்தியை எதிர்த்து பிரசாந்த் போட்டியிடுகின்றனர். இந்த அணியினர் நடிகர் ரஜினியை சந்தித்து விட்டு வேட்புமனு தாக்கல் செய்திருக்கின்றனர். செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு பூர்ணிமா பாக்கியராஜ், ஆரத்தி கணேஷ், காயத்ரி ரகுராம், ரமேஷ்கண்ணா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

திடீரென இந்த அணி போட்டியில் குதித்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஆளும்கட்சியான அ.தி.மு.க.வின் மறைமுக ஆதரவில் பாக்கியராஜ் அணி குதித்துள்ளதோ என்ற சந்தேகம் கிளப்பப்பட்டது. இதன்மூலம், நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் நுழைவதாக செய்திகள் வெளியாகின. விஷால் கூட அதை கிளப்பினார்.

இதற்கிடையே, தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த பின் நடிகர் பாக்யராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நாசர் தலைமையிலான பாண்டவர் அணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, தன்னை ‘சவுக்கிதார்(காவலாளி) ’ என்று கூறி எப்படி மோடி தேர்தலை சந்தித்ததாரோ, அதே போல் சங்கத்தை காப்பாற்றவுள்ள காவலாளியாக நாங்கள் வந்துள்ளோம். நடிகர் சங்கத் தேர்தலில் எங்கள் அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத்தை உருவாக்கியவர் சுவாமி சங்கரதாஸ் என்பதால் அணிக்கு அவர் பெயர் வைத்துள்ளோம். சங்க கட்டட பணிக்கு இன்னும் பத்து, பதினைந்து கோடி நிதி தேவைப்படுகிறது. அவர்களிடம் என்ன திட்டம் உள்ளது? ஐசரி கணேஷ் ஏற்கனவே சங்கத்திற்கு நிறைய உதவி செய்திருக்கிறார். நாங்கள் கட்டடம் கட்ட நிதி திரட்டுவதற்கு திட்டங்கள் வைத்திருக்கிறோம். நாங்கள் பதவிக்கு வந்து ஆறே மாதங்களில் கட்டடத்தை கட்டி முடிப்போம்.

நடிகர் சங்க கட்டட பணி விரைந்து முடிய வேண்டும் என்பதே ரஜினி, கமலின் விருப்பம். அவர்களுடன் ஆலோசித்த பிறகுதான் நாங்கள் போட்டியிடுகிறோம்.
ரஜினியை நான் சந்தித்த போது, நான் தலைவரானால் நன்றாக இருக்கும் என்பதை ரஜினியே சொன்னார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடியின் ‘சவுக்கிதார்’ வார்த்தையை பாக்யராஜ் பயன்படுத்தி இருப்பதும், தன்னை தலைவராக பார்க்க ரஜினி ஆசைப்படுகிறார் என்று சொல்லியிருப்பதையும் பார்த்தால், இந்த அணிக்கு பா.ஜ.க. ஆதரவு உள்ளதோ என்று சந்தேகமும் வரத் தொடங்கி விட்டது. எப்படியோ சங்கத் தேர்தலில் தி.மு.க. அணியும், பா.ஜ.க-அ.தி.மு.க. அணியுமாக போட்டி உருவாகியிருப்பதாக பேச்சு அடிபடத் தொடங்கி விட்டது.

ஆனால், நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் எதுவும் கலக்கவில்லை என்று நாசரும், பாக்யராஜூம் மறுத்துள்ளனர். பாக்யராஜ் கூறுகையில், ‘‘எங்களுக்கு பின்னால் எந்த அரசியலும் இல்லை. அரசியல் இருப்பதாக தெரிந்தால் நானே போட்டியிட்டிருக்க மாட்டேன்’’ என்றார்.

நாசர் கூறுகையி்ல், ‘‘பாக்யராஜ் அணிக்கு பின்னால் அ.தி.மு.க. இருப்பது போல் பேசுகிறார்கள். அது உண்மையல்ல. அவர்களுக்கு தற்போதைய சூழலில் இந்த தேர்தலில் தலையிட எல்லாம் நேரம் இருக்காது’’ என்றார்.

ஆனாலும், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் கடந்த முறை போல் போட்டி கடுமையாகி உள்ளது. பாண்டவர் அணி- சுவாமி சங்கரதாஸ் அணி இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

You'r reading சவுக்கிதார் பாக்யராஜ் அணிக்கு பின்னணியில் எந்த அரசியல் கட்சி? Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை