சென்னையில் நடைபெறும் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் 2 அமைச்சர்களும் பங்கேற்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தான் வேண்டும் மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏவும், மாவட்டச் செயலாளருமான ராசன்செல்லப்பா திடீரென போர்க்கொடி தூக்கினார். இதனால் அதிமுகவில் பெரும் கலகம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவசரமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டு இன்று காலை கூட்டம் தொடங்கியது.
அடுத்து என்ன நடக்குமோ? என்ற உச்சக்கட்ட பதற்றமான சூழலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் நிலையில் பரபரப்புகளுக்கும் பஞ்சமில்லை என்றே கூறலாம். காலையில் கூட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன், தலைமைக் கழகம் எதிரே திடீரென எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக்க வேண்டும் என்ற போஸ்டர் பளிச்சிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கூட்டத்தில் பங்கேற்றவர்கள், செல்போன்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
இந்தக் கூட்டத்திற்கு தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் என கருதப்படும் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு அழைப்பு விடப்படாததால் அவர்கள் 3 பேரும் பங்கேற்கவில்லை. ஆனால் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சி.வி.சண்முகம் ஆகிய இருவரும் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்ததும் பரபரப்பு செய்தியானது. கடைசியில் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு ஓ.எஸ்.மணியன் சென்று விட்டதும், உடல் நிலை காரணமாக சி.வி.சண்முகம் பங்கேற்கவில்லை என்று காரணம் கூறப்பட்டது.
ராசன்செல்லப்பாவின் ஒற்றைத் தலைமை கோஷத்துக்கு ஆதரவு தெரிவித்த குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரனும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டார் என்பதும் கூடுதல் தகவல்.