இந்தியாவில் இ்ந்த ஆண்டு கோடை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாட்டி வதைக்கிறது. வடமாநிலங்களில் 113 டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சென்னையில் இன்னும் அனல் குறைந்தபாடில்லை.
வட மாநிலங்களில் இந்த ஆண்டு ஒரு மாதத்திற்கும் மேலாக கடும் வெப்பக் காற்று வீசுகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி, ராஜஸ்தானில் சிரு, பிகானீர், பஞ்ாப்பில் பாட்டியாலா, ஹரியானாவில் ஹிசார், பிவாணி, மத்தியப் பிரதேசத்தில் குவாலியர், போபால் ஆகிய நகரங்களில் கடந்த சில நாட்களாகவே கோடை வெப்பம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நகரங்களில் அதிகபட்சமாக 113 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதேபோல், டெல்லியில் ஜூன் 10ம் தேதியன்று அதிகபட்சமாக 48 டிகிரி செல்சியஸ் அதாவது 118 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது. இது பற்றி வானிலை ஆய்வு மைய நிபுணர் டி.எஸ். பாய் கூறுகையியில் ‘‘கடந்த 1991ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் கோடை காலம் அதிகரித்து கொண்டே செல்கிறது. 1988ம் ஆண்டில் அதிகபட்சமாக கோடை வெப்ப நாட்களாக 33 நாட்கள் இருந்தன. 2016ல் 32 நாட்கள் அதிக வெப்பம் பதிவான நாட்களாக இருந்தது. இந்த ஆண்டு ஜூன் 10ம் தேதிக்குள் 32 வெப்ப நாட்களை தொட்டு விட்டோம். எனவே, இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் நீண்ட கோடை காலம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
வெப்பம் தாங்க முடியாமல் மக்கள் தவிப்பது ஒரு புறமிருக்க, வடமாநிலங்களில் தண்ணீர் பஞ்சமும் பெரும் பிரச்னையாக உள்ளது. நைனிடால், முசோரி போன்ற கோடை வாசஸ்தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தொடுகிறதாம். குலுமணாலி, சிம்லா போன்ற இடங்்களில் இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை எட்டி விட்டதாம்.
தமிழகத்தில் மேற்கு மாவட்டங்களிலும், தென்மாவட்டங்களிலும் இந்த கோடையில் சிறிதேனும் மழை பொழிந்தது. ஆனால், தலைநகர் சென்னையை இன்னும் சூரியன் வாட்டி வதைக்கிறான். சென்னையில் நுங்கம்பாக்கம், மீனம்பாக்கத்தில் சர்வசாதாரணமாக 100 டிகிரியைத் தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. ஜூன் 3ம் தேதி 42.3 டிகிரி செல்சியஸ் அதாவது 108 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. இந்த வாரத்துடன் வெப்பம் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதனால், மழை எப்போது வரும் என்று சென்னை மக்கள் தினம்தினம் ஏங்கி வருகிறார்கள்.