நயன்தாரா குறித்து சர்ச்சையாக பேசியதால் திமுகவிலிருந்து ஓரம் கட்டப்பட்ட நடிகர் ராதாரவி அதிமுகவில் இணைந்துள்ளார். ராதா ரவிக்கு ஆளும் கட்சியே அரசியல் புகலிடம் கொடுத்திருப்பது நடிகை நயன்தாராவை கடுப்பேற்றும்.
சர்ச்சை கருத்துக்களைக் கூறி அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்துபவர் நடிகர் ராதாரவி. இதனால் இவர் எந்தக் கட்சியில் இருந்தாலும் நீண்ட நாட்கள் அக்கட்சியில் நீடித்தது கிடையாது என்றே கூறலாம். முதலில் திமுகவில் இருந்த ராதாரவி, மதிமுகவை ஆரம்பித்தபோது வைகோ ஆதரவாளரானார். பின்னர் அதிமுக பக்கம் தாவி, சைதாப்பேட்டை இடைத்தேர்தலில் வெற்றி எம்எல்ஏ ஆனார். அங்கும் நீடிக்கவில்லை. பின்னர் மீண்டும் திமுக பக்கம் தாவினார்.
சமீபத்தில் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் நடிகை நயன்தாரா பற்றி ஆபாசமாக விமர்சனம் செய்து வம்பில் மாட்டிக் கொண்டார். ஒட்டு மொத்த திரையுலகின் கண்டனத்துக்கு ஆளான ராதாரவியை திமுக சஸ்பென்ட் செய்தது . ஆனாலும் ராதாரவியோ சஸ்பெண்ட் எதற்கு? நானே கட்சியிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று சவடாலாக கூறியிருந்தார்.
இந்நிலையில் திடீரென இன்று அதிமுகவில் இணைந்துள்ளார் ராதாரவி .முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அவர் அதிமுகவில் சேர்ந்தார். தன்னைப் பற்றி ஆபாசமாக விமர்சித்த ராதாரவியை கட்சியை விட்டு சஸ்பென்ட் செய்ததற்கு, திமுகவுக்கு நன்றி கூட தெரிவித்திருந்தார் நயன்தாரா. இந்நிலையில் ஆளும் கட்சியே ராதாரவிக்கு அரசியல் புகலிடம் கொடுத்துள்ளது நயன்தாராவுக்கு உண்மையில் அதிர்ச்சி அளிப்பதாகவே இருக்கும் என்று தெரிகிறது.