தேவையில்லாத சான்றிதழ்களை கேட்பது ஏன்...? நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களை வடிகட்ட சதி - வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு

Mdmk leader questions why asking unnecessary Certificates from NEET exam passed students:

by Nagaraj, Jun 13, 2019, 16:54 PM IST

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடம் தேவையில்லாத சான்றிதழ்களைக் கேட்டு, அவர்களையும் வடிகட்ட சதி நடக்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி சாதாரண எளிய குடும்பப் பின்னணி கொண்ட மாணவர்களின் கனவைத் தகர்த்து எறிந்து விட்டது பாஜக அரசு. தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதை, ஒரு பொருட்டாகவே பாஜக அரசு கருதாமல் குப்பைக் கூடையில் வீசி எறிந்து விட்டது.

நீட் தேர்வால் மருத்துவப் படிப்பு கிடைக்காமல் போன விரக்தியில் அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ, ரிதுஸ்ரீ, சைஷ்யா, மோனிஷா போன்ற மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்நிலையில் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் இணையம் மூலம் விண்ணப்பத்தைத் தரவு இறக்கம் செய்து மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்தது.
அதன்படி, விண்ணப்பத்தைத் தரவு இறக்கம் செய்த மாணவர்களுக்குக் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

விண்ணப்பத்தில் எந்தெந்தச் சான்றிதழ்கள் இணைக்கப்பட வேண்டும் என்று பட்டியல் தரப்பட்டு இருக்கின்றது.
அதில் 5-வது வரிசை எண்ணில்,
+2 தேர்வு எழுதியபோது அளிக்கப்பட்ட தேர்வு மைய நுழைவுச் சீட்டு (HSC Hall Ticket) கேட்கப்பட்டு இருக்கின்றது.

கடந்த ஆண்டும், அதற்கு முன்பும் +2 தேர்வு எழுதியவர்கள், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் மீண்டும் முயற்சிக்கும் வகையில் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி இருக்கின்றனர். அவர்களிடம் 3 ஆண்டுகளுக்கு முன் +2 எழுதிய தேர்வு மைய நுழைவுச் சீட்டு கேட்டால் எங்கே போவார்கள்? அதைக் கேட்க வேண்டிய தேவை என்ன?

அது மட்டுமின்றி வரிசை எண்.14-ல்

நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றுகள், சாதிச் சான்றிதழ் இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ் கேட்க வேண்டிய தேவை என்ன?
இருப்பிடச் சான்றாக குடும்ப அட்டை அல்லது ஆதார் போன்றவை இணைத்தால் போதுமானதாகாதா?

இதுபோன்ற சான்றுகளுடன் ஜூன் 20-ந் தேதிக்குள் ஆன் லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவித்து மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கின்றது.

+2 தேர்வு மைய நுழைவுச் சீட்டு, பெற்றோர் படிப்புச் சான்றிதழ் போன்றவற்றைக் கேட்பதன் மூலம் நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ள மாணவர்களையும் ‘வடிகட்டி’ வாய்ப்பை மறுக்கும் சதியோ என்றுதான் கருத வேண்டி இருக்கின்றது. இது வன்மையான கண்டனத்துக்கு உரியது.

தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில், மருத்துவப் படிப்பு விண்ணப்பங்களில் தேவை இல்லாத சான்றுகளை இணைக்க வெளியிட்டுள்ள அறிவிப்பைத் திருப்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் வைகோ தெரிவித்துள்ளார்.

You'r reading தேவையில்லாத சான்றிதழ்களை கேட்பது ஏன்...? நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களை வடிகட்ட சதி - வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை