அரிசி, உலகின் அநேக பகுதிகளில் உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இன்றைக்கு வரைக்கும் அரிசியின் தன்மை மற்றும் அதிலுள்ள சத்துகள் குறித்த சரியான புரிதல் யாருக்கும் இல்லை. பல முரண்பாடான கருத்துகள் அரிசி உணவை பற்றி பரவி வருகின்றன. அரிசியை பற்றி கூறப்படும் தகவல்களில் எவை உண்மை? எவையெல்லாம் தவறான நம்பிக்கைகள் என்று அறிந்து கொள்வது முக்கியம்.
உண்மைகள்:
அரிசியில் கார்போஹைடிரேட் என்ற சர்க்கரைப் பொருள் அதிக அளவில் உள்ளது. ஒரு கிண்ணம் வெள்ளை சோற்றில் (சாதம்) 35 கிராம் கார்போஹைடிரேட் உள்ளது.
ஒரு கிண்ணம் வெள்ளை சோற்றில் 165 கலோரி ஆற்றல் அடங்கியுள்ளது.
ஒரு கிண்ணம் வெள்ளை சோற்றில் 3 முதல் 4 கிராம் மட்டுமே புரோட்டீன் என்னும் புரதம் உள்ளது.
மற்ற எல்லா கார்போஹைடிரேட் உணவு பொருள்களையும் போல சாதமும் உணவு மண்டலத்தில் குளூக்கோஸாக மாற்றப்படுகிறது. மனித உடலின் ஆற்றல் மூலம் குளூக்கோஸ்தான். அரிசியில், வெள்ளை அரிசி, சிவப்பு அரிசி என்று இரு வகை உள்ளன. இந்த இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு, ஆரோக்கிய நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்தது.
வெள்ளை அரிசியில் நார்ச்சத்து குறைவு. அதில் 0.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. ஆனால் சிவப்பு அரிசியில் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது. மேலும் வெள்ளை அரிசியில் இல்லாத வைட்டமின்கள் மற்றும் பாஸ்பரஸ், மெக்னீசியம், செலினியம், மாங்கனீசு ஆகிய தாதுக்களும் உள்ளன.
அரிசியை பற்றி நிலவும் தவறான நம்பிக்கைகள்:
குளூட்டன்: சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் குளூட்டன் என்னும் பசையம் அரிசியில் உள்ளது என்று நம்பப்படுகிறது. இது தவறாகும். வேறு சில தானியங்களில் குளூட்டன் காணப்படுகிறது. குளூட்டன் அதிகமாக காணப்படும் தானியங்கள் நீரிழிவு உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்களுக்கும் ஏற்றதல்ல.
கொழுப்பு: அரிசியில் கொழுப்புச் சத்து நிறைந்துள்ளது எனப்படுவதும் தவறு. அரிசியில் மிகக்குறைந்த அளவே கொழும்பு உள்ளது. கொலஸ்ட்ரால் இல்லவே இல்லை. அரிசியில் கார்போஹைடிரேட் இருப்பதால் உடலுக்கு ஆற்றலை தரும்.
புரதம்: அரிசியில் புரோட்டீன் என்னும் புரதச்சத்து இல்லை என கூறப்படுவது தவறு. அரிசியில் அதிக அளவில் காணப்படும் சத்தில் இரண்டாம் இடம் புரதத்திற்கு தான். ஒரு கிண்ணம் வெள்ளை சாதத்தில் 3 முதல் 4 கிராம் புரதம் அடங்கியுள்ளது. மற்ற தானியங்களைக் காட்டிலும் அரிசியிலுள்ள புரதம் தரமானதாகும்.
உப்பு: அரிசியில் அதிக அளவு உப்புச்சத்து காணப்படுகிறது என்ற நம்பிக்கையும் தவறாகும். அரிசியில் மிகக்குறைந்த அளவே சோடியம் உள்ளது.
இரவு உணவு: இரவில் சோறு சாப்பிட்டால் உடலில் அதிக கொழுப்புச் சத்து சேரும் என்ற ஒரு நம்பிக்கை உள்ளது. இதுவும் தவறு. கார்போஹைடிரேட் அதிக அளவில் உள்ளதால் இரவில் அது வளர்சிதை மாற்றத்திற்குட்பட்டு குளூக்கோஸாக மாற்றப்பட்டு ஆற்றலாக சேமிக்கப்படுகிறது.
இரத்தத்தில் உள்ள குளூக்கோஸ் இரவில் எளிதாக ஆற்றலாக மாறும். அரிசி மற்றும் ஏனைய தானியங்களை பகலில் சாப்பிடாமல் இருப்பது நலம். ஏனெனில் அவற்றிலுள்ள குளூக்கோஸ் பகலில் எளிதாக கொழுப்பாக மாற்றம் பெறும்.
செரிமானம்: அரிசி, ஜீரணமாக கடினம் என்ற நம்பிக்கையும் தவறாகும். ஏற்கனவே அரிசியிலுள்ள தவிடு மற்றும் உமி நீக்கப்படுவதால் அது அநேக ஊட்டச்சத்துகளை இழந்துவிடுகிறது. நம் செரிமான மண்டலத்தில் சுரக்கப்படும் நொதிகள், அரிசியை ஜீரணிக்க வல்லவை. ஆகவே, அரிசி எளிதில் செரிமானம் ஆகும்.
வெள்ளை அரிசிக்குப் பதிலாக சிவப்பு அரிசி சாப்பிட்டால் கார்போஹைடிரேட் உடன் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாதுசத்து ஆகியவையும் நமக்குக் கிடைக்கும்.