‘உங்கள் தமாஷ் பேச்சைக் கேட்டு மக்கள் கொந்தளித்து போயுள்ளனர்’’ என்று அமைச்சர் வேலுமணியை தினமலர் பத்திரிகை விமர்சனம் செய்துள்ளது.
சென்னையில் தண்ணீர் பிரச்னை கடுமையாக உள்ளது. தினமும் நாளிதழ்களில் பக்கம், பக்கமாக மக்கள் தண்ணீருக்காக அல்லாடும் காட்சிகளை படம்பிடித்து போடுகிறார்கள். இந்நிலையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று(ஜூன்17), செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, ‘‘சென்னையில் தண்ணீர் பஞ்சம் என்று எதிர்க்கட்சிகள் வீண் வதந்தி பரப்புகிறார்கள். மக்களுக்கு உரிய முறையில் தண்ணீர் சப்ளை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என்று கூறியிருந்தார்.
அமைச்சர் இப்படி கூறியதை தினமலர் பத்திரிகை, மந்திரியின் தமாஷ் பேச்சு என்று விமர்சனம் செய்துள்ளது. சென்னை மக்கள் காலைக் கடனை முடித்து விட்டு, கழுவுவதற்கு தண்ணீர் இல்லாமல் அவதிப்படும் நிலையில், அமைச்சர் தமாஷ் பண்ணுகிறார். அவரது தமாஷ் பேச்சைக் கேட்டு மக்கள் கொந்தளித்து போயுள்ளனர் என்று அந்த பத்திரிகை, தலைப்பு செய்தி வெளியிட்டிருக்கிறது.