மக்களவையின் புதிய சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பிரதமர் மோடியும், மக்களவை காங். தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
17-வது மக்களவையின் புதிய சபாநாயகர் பதவிக்கு ராஜஸ்தான் மாநிலம் கோடா மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி.ஓம் பிர்லாவை அக்கட்சி சிபாரிசு செய்திருந்தது. பிரதமர் மோடியும், 2 ன் துறை அமைச்சர் அமித் ஷாவும் ஒம்பிர்லாவின் பெயரை முன்மொழிந்திருந்தனர். பாஜக கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஓம் பிர்லாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.
இதனால் இன்று காலை மக்களவை கூடியவுடன், புதிய சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு ஆனதாக அறிவிக்கப்பட்டது. அப்போது பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும், அனைத்து எம்.பி.க்களும் வரவேற்பு தெரிவித்து ஆரவாரம் செய்தனர். அதன் பின் மக்களவை மரபுப்படி பிரதமர் மோடியும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும், ஓம்பிர்லாவை சபாநாயகர் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர். பின்னர் பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் குழுத் தலைவர்கள் ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து பிரதமர் மோடியும், பிற கட்சிகளின் தலைவர்களும் மக்களவையில் பேசினர். 57 வயதான ஓம் பிர்லா ராஜஸ்தான் மாநிலம் கோடா மக்களவைத் தொகுதியில் இருந்து இரு முறை எம்.பி.யாக வெற்றி பெற்றவர் அதற்கு முன் 3 முறை எம்.எல்.ஏ.வாகவும் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.