ஒவ்வொரு நாளையும் நிம்மதியே இல்லாமல் கடத்தி வருகிறேன் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கவலையுடன் தெரிவித்திருக்கிறார்.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் 79 எம்.எல்.ஏ.க்களை பெற்றிருந்தாலும், 37 எம்.எல்.ஏ.க்களை பெற்றுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமிக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்திருக்கிறது.
இதனால், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா உள்பட காங்கிரஸ் தலைவர்கள், குமாரசாமி அரசுக்கு தினம்தோறும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். மேலும் தனிப்பெரும் கட்சியாக 104 எம்.எல்.ஏ.க்களை பெற்றுள்ள பா.ஜ.க.வும், எப்போது ஆளும் கூட்டணி உடையும் என்று காத்திருக்கிறது.
இந்த நிலையில், முதலமைச்சர் குமாரசாமி கூறியதாவது:
நான் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறேன். ஆனால், தினம் தினம் நிம்மதியை இழந்துதான் நாட்களை கடத்துகிறேன். அதை எல்லாம் வெளிப்படுத்த வேண்டுமென்று நினைத்தாலும், அது முடியாது. மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது என் பொறுப்பு. அதனால், அரசை சுமுகமாக நடத்துவது எனது கடமையாகும்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். இது பற்றி, சித்தராமையாவிடம் கேட்டதற்கு, ‘‘பா.ஜ.க.வினர் எப்படியாவது இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது நடக்காது’’ என்று பதிலளித்தார்.