தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம்..? மீண்டும் அடித்து சொல்கிறார் மு.க.ஸ்டாலின்

DMK leader mk Stalin again assures, government in TN will change very soon

by Nagaraj, Jun 24, 2019, 13:12 PM IST

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு கவிழ்ந்து, தேர்தலுக்கு முன்பாகவே ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் பேச ஆரம்பித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் உச்சக்கட்ட குழப்பம் ஏற்பட்டாலும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தப்பிப் பிழைத்து வருகிறது என்றே கூறலாம். முதலில் ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக பிரிந்து எடப்பாடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து தோற்றுப் போனார். பின்னர் அதிமுகவிலேயே ஓபிஎஸ் அடைக்கலமானார்.

அதன் பின் தினகரன் தன் பக்கம் 18 அதிமுக எம்எல்ஏக்களை வைத்துக் கொண்டு எடப்பாடி அரசை ஆட்டம் காணச் செய்ய என்னென்னவோ தகிடுதத்தங்கள் செய்து பார்த்தார். கடைசியில் தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களின் பதவி ஆட்டம் கண்டது தான் மிச்சம். திமுக தரப்பிலும் ஆட்சி கவிழாதா? அரியணையில் ஏறுவது எப்போது? என இலவு காத்த கிளியாக 2 வருடமாக காத்துக் கிடப்பதுடன், ஆட்சிக் கவிழ்ப்புக்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் பலிக்கவில்லை.

இந்த நேரத்தில் தான் 22 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்சி அரியணையில் ஏறிவிடலாம் என திமுக தேர்தலில் முனைப்பு காட்டியது.மு.க.ஸ்டாலினும் தேர்தல் முடிவுக்குப் பின் எடப்பாடி ஆட்சி கவிழும், திமுக ஆட்சியில் அமரப்போவது உறுதி என தனது பிரச்சாரத்தின் பெரும் பகுதி நேரம் பேசினார்.

தற்போது திமுக கூட்டணி வசம் இருக்கும் 97 எம்எல்ஏக்களுடன் 22 தொகுதியில் வெற்றி பெற்றால் 97+22 = 119 என்றெல்லாம் கணக்குச் சொல்லி மக்களிடம் பிரச்சாரம் செய்தார். ஆட்சி மாற்றத்துக்கான தேதி என கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதியையும் குறித்தார் மு.க.ஸ்டாலின் . ஆனால் மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்தாலும் ஆட்சி மெஜாரிட்டிக்கு தேவையாக 9 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை எடப்பாடி தரப்பு தக்க வைத்துக் கொண்டது.

எடப்பாடி ஆட்சிக்கு எதிராக மற்றொரு பக்கம் டிடிவி தினகரனும் இடைத் தேர்தல் களத்தில் மல்லுக்கட்டப் பார்த்தார். ஆனால் தேர்தல் முடிவில் தினகரனின் நிலைமை தான் அந்தோ பரிதாபமாகிவிட்டது. தினகரனின் கட்சியே கலகலக்க ஆரம்பித்து, அக்கட்சியின் முக்கியப் புள்ளிகள் பலரும் வரிசையாக அதிமுக பக்கம் தாவ ஆரம்பித்து விட்டனர். எடப்பாடியையும், ஓபிஎஸ்சையும் சரமாரியாக வசைபாடி வந்த தங்க. தமிழ்ச்செல்வனும், இந்த ஆட்சி ஸ்ட்ராங்காக உள்ளது. கடைசி வரை யாராலும் கவிழ்க்க முடியாது என்று பாராட்டுப் பத்திரம் வாசிப்பதுடன், அவர் அதிமுகவில் ஐக்கியமானாலும் ஆச்சர்யம் இல்லை என்றளவுக்கு எடப்பாடி அரசு பல கண்டங்களை தாண்டி விட்டது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி மாற்றம் என்ற அஸ்திரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளார்.சென்னை சேப்பாக்கத்தில் தண்ணீர் பிரச்னைக்காக இன்று  திமுக ஆர்ப்பாட்டம்; அதில் பேசிய மு.க.ஸ்டாலின், அதிமுகவினர் யாகம் நடத்தியது தண்ணீ குக்காக அல்ல; ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் யாகம் நடத்தினர். ஆனாலும் தேர்தலுக்கு முன்பாகவே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி என்று திட்டவட்டமாக பேசினார். வரும் 28-ந் தேதி சட்டப்பேரவை கூட உள்ள நிலையில், ஆட்சி மாற்றம் என மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இனிமேல் எடப்பாடி அரசை கவிழ்க்க வேண்டுமெனில், அதிமுக எம்எல்ஏக்களில் கணிசமானவர்களை நப்பாசை காட்டி திமுக பக்கம் இழுக்க வேண்டும். அப்படியே கட்சித் தாவல் நடந்தாலும் அதற்கு ஆதரவாக ஆளுநரும் மத்திய அரசும் செவிசாய்க்க வேண்டும். இதற்கெல்லாம் பாஜக பக்கம் திமுக இணக்கம் காட்டினால் மட்டுமே சாத்தியம். ஆனால் அதற்கான முயற்சிகள் நடக்காமல் இல்லை என்றே திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதற்கு உதாரணமாக திருச்சியில் திமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசியதை சுட்டிக் காட்டுகிறார்கள். கடந்த சனிக்கிழமை திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய நேரு, எத்தனை நாளைக்குத் தான் காங்கிரசை பல்லக்கு தூக்கி சுமப்பது என்று கொளுத்திப் போட்டார்.

நேரு பேசிய பேச்சுக்கு காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தாலும், திமுக தலைமையோ எந்த ரியாக்ஷனும் காட்டாமல் மவுனம் சாதிக்கிறது. பொதுவாக திமுக நிர்வாகிகள் ஏதேனும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினால் உடனடியாக ரியாக்ஷன் காட்டுவது தான் திமுக தலைமையின் வழக்கம். நயன்தாராவைப் பற்றி ராதாரவி கிண்டலடித்தற்கு உடனடியாக கட்சியிலிருந்து கட்டம் கட்டியது திமுக. அதே போல் தற்போது சென்னைக்கு தண்ணீர் கொண்டு சென்றால் போராட்டம் வெடிக்கும் என்று ஆவேசம் காட்டிய மூத்த தலைவரான துரைமுருகனையே, தான் அப்படி பேசவேயில்லை என மறுப்பு அறிக்கை வெளியிடச் செய்தது.

ஆனால் கே.என்.நேரு கூறியது அவருடைய சொந்தக் கருத்து என்ற ரீதியில் கூட சொல்லாமல் மவுனம் சாதிப்பது, திமுக மேலிடத்தின் ஆசீர்வாதத்துடனே நேரு பேசியிருப்பதாக கூறப்படுகிறது. இது, தமிழக ஆட்சி அதிகாரத்திற்காக காங்கிரசை உதறித் தள்ளி விட்டு, பாஜக பக்கம் திமுக சாயத் தொடங்கி விட்டதையே காட்டுகிறது என விவரமறிந்த சிலர் இப்போது கிசுகிசுக்கின்றனர். அப்படி நடந்தால் மு.க.ஸ்டாலின் சொல்வது போல் விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் சாத்தியம் தான் என்றும் கூறுகின்றனர். இவற்றுக்கெல்லாம் விரைவில் கூட உள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரில் திமுக கொண்டு வரப்போகும் சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது விடை தெரியத்தான் போகிறது.

குடிக்க தண்ணீர் எங்கே..? காலிக்குடங்களுடன் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

You'r reading தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம்..? மீண்டும் அடித்து சொல்கிறார் மு.க.ஸ்டாலின் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை