மதுரையர் உள்ள புகழ் பெற்ற பாலத்திற்கு காவி நிறத்தில் வர்ணம் பூசியதால் கொந்தளித்த திமுக எம்எல்ஏ பி.டி.ஆர்.தியாகராஜன், அதிமுக அரசை அடிமை... டயர் நக்கி.. என சகட்டுமேனிக்கு விமர்சித்துள்ளது பெரும் மரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்வது ஏ.வி.விக்டர் மேம்பாலம் . வைகை ஆற்றின் நடுவே மதுரை யின் வட பகுதியையும், தென் பகுதியையும் இணைக்கும் இந்தப் பாலம் 130 ஆண்டு கால பாரம்பரியம் மிக்கது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது இந்தப் பாலத்தின் மீது நின்று தான் ஆயிரக்கணக்கான விஐபிக்கள் கண்டுகளிப்பது வழக்கம். பாலத்தின் கீழ்ப்பகுதியிலும் லட்சக்கணக்கானோர் திரண்டிருப்பர். அப்போது இந்தப் பாலத்தின் அழகே தனி அழகுதான்.
இத்தனைக் காலமும் வெள்ளை வர்ணப் பூச்சுடன் தான் இந்தப் பாலம் காணப்படும். தற்போது பாலம் சீரமைக்கப்பட்டு, புதிய வண்ணம் பூசும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று திடீரென காவி வர்ணம் அடிக்கப்பட்டு காட்சியளிப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாஜகவின் மீதான அதிதீவிர விசுவாசத்தில்,பள்ளிப் பாடப்புத்தகத்தில் பாரதியாரின் தலைப்பாகைக்கு காவி வர்ணம் தீட்டியவர்கள், இப்போது மதுரையின் அடையாளமாகத் திகழும் பாலத்துக்கும் காவி வர்ணமா?. என்று பலரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாலம் அமைந்துள்ள மதுரை மத்திய தொகுதியின் திமுக எம்எல்ஏவான பி.டி.ஆர். தியாகராஜனும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கடிதமும் எழுதினார். ஆனால், நெடுஞ்சாலைத் துறை தரப்பில்,பாலத்துக்குப் பொருந்தும் வகையில் சில வண்ணங்களைத் தேர்வு செய்வதற்காக அடிச்ச ஆரஞ்சு நிறத்தைத்தான் காவினு மக்கள் தவறா புரிஞ்சுக்கிட்டாங்க.. மற்றபடி பொன்னிற மஞ்சள் நிறத்தில் தான் வர்ணம் பூசப் போகிறோம் என்று விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் எம்எல்ஏ பி.டி.ஆர்.தியாகராஜன் டுவிட்டரில் தன் எதிர்ப்பை தெரிவித்து, பாலத்தின் படங்களுடன் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் பாரம்பரியமிக்க மதுரை ஏ.வி. மேம்பாலத்திற்கு இந்த வண்ணத்தை அடிப்பது எப்படி சரியாகும்? இங்கு யார் ஆட்சி நடக்கிறது? அண்ணா, திராவிடம் என்று கட்சிக்கு பெயர் வைத்துக்கொண்டு கொஞ்சமும் சுயமரியாதையற்ற வகையில் செயல்பட்டால் மக்கள் இவர்களை அடிமை... டயர் நக்கி... என்றெல்லாம் அழைக்காமல் இருப்பார்களா? என்று கடுமையாக சாடியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.