ராதாரவி விவகாரத்தில் நடிகர் சங்கத்தை கேள்வி கேட்ட நயன்தாரா...! ஓட்டுப் போடாதது ஏன்

by Nagaraj, Jun 24, 2019, 20:56 PM IST
Share Tweet Whatsapp

ராதாரவி மோசமாக விமர்சித்த போது, நடிகர் சங்கத்தை கேள்வி கேட்ட நயன்தாரா, சங்க நிர்வாகிகள் தேர்தலில் ஓட்டுப் போடாதது ஏன்? என கேள்விகள் எழுந்து சர்ச்சையாகி உள்ளது.

பலப்பல இடையூறுகள், சர்ச்சைகள்,நீதிமன்ற வழக்குகள் என பல்வேறு சலசலப்புகளுக்கு இடையே தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் பரபரப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தாலும் திரையுலக பிரபலங்கள் பலர் ஓட்டுப் போடாதது இப்போது பெரும் விவாதமாகியுள்ளது.

நடிகர் சங்கத் தேர்தலில் எப்போதும் தவறாமல் வாக்களிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த முறை ஓட்டளிக்கவில்லை. மும்பையில் படப்பிடிப்பில் இருந்த தமக்கு தபால் ஓட்டு தாமதமாக வந்ததை குறிப்பிட்டு முதல் நாளே தனது வருத்தத்தை பதிவிட்டு தப்பித்துக் கொண்டார். எப்போதும் போல தல அஜீத்குமார், இந்த முறையும் ஓட்டுப் போடாததால், அதையும் யாரும் பொருட்படுத்தவில்லை.இன்னும் பல பிரபலங்கள் ஓட்டுப் போட வராவிட்டாலும் அதைப் பற்றி சீரியசாக யாரும் எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் நடிகை நயன்தாரா ஓட்டுப் போட வராதது மட்டும் பெரும் விவாதமாகியுள்ளது. இதற்குக் காரணம், நடிகர் ராதாரவி மேட்டர்தான். கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தான் ஒரு பட விழாவில் நயன்தாரா பற்றி படுமட்டமாக ராதாரவி விமர்சித்திருந்தார். தன்னைப் பற்றி பல ஆண்டுகளாக பல்வேறு விமர்சனங்கள், கிசுகிசுக்கள் எழுந்த போதெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்த நயன்தாரா, ராதாரவியின் மட்டமான பேச்சால் கொதிந்தெழுந்தார். நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்ட நயன்தாரா, அதில் நடிகர் சங்கத்தையும் கேள்வி கேட்டிருந்தார். பெண்களின் பாதுகாப்புக்கும், பாலியல் புகார்களை விசாரிக்க விசா கா கமிட்டி அமைத்தது போல், திரையுலகிலும் அமைக்கக் கூடாதா என்றெல்லாம் அறிக்கையில் நயன்தாரா கேள்வி எழுப்பியிருந்தார்.

நயன்தாராவின் அறிக்கைக்கு மதிப்பளித்த நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷாலும் உடனடியாக ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்ததுடன், இது போன்ற போக்கு நீடித்தால் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு மறுக்கப்படும் என்ற ரீதியில் எச்சரிக்கை விடுத்தார். அதன் பின் தமக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களுக்கு மிகப் பெரிய நன்றி தெரிவித்தும் அறிக்கை விட்டார் நயன்தாரா.

இப்படி நயன்தாராவுக்கு திரையுலகம் சப்போர்ட் செய்து 3 மாதங்கள் தான் ஆகிறது. ஆனால் தற்போது நடந்த நடிகர் சங்கத்தில் ஓட்டுப் போட மட்டும் நயன்தாரா வரவில்லை. இதைத் தான் பலரும் கேள்வி கேட்டுள்ளனர்.கடந்த முறையும் நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டுப் போடாத நயன்தாரா, இந்த முறையாவது, அவருக்கு குரல் கொடுத்ததற்காவது ஓட்டுப் போட வந்திருக்கலாமே? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து பாண்டவர் அணி சார்பில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் கூறுகையில், ஓட்டுப் போட வராதவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது. .அறிவுறுத்தலாக வேண்டுமானால் கூறமுடியுமே தவிர, அழுத்தம் கொடுக்க முடியாது. நயன்தாராவைப் பொறுத்தவரை, அவருக்குப் பிரச்சினை என்று வரும்போது சங்கம் தேவைப்படுகிறது. சங்கம் ஆதரவு தரவில்லை என்று கோபமும் வருகிறது. அப்படியானால் சங்க உறுப்பினரின் தலையாய கடமையான ஓட்டுப் போடுவதற்கு நயன்தாரா வந்திருக்க வேண்டுமல்லவா? என்று ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.


Leave a reply