இனி அமமுகவில் இடமில்லை... தங்க.தமிழ்ச்செல்வன் தஞ்சமடைவது திமுகவா? அதிமுகவா?- ஒரே பரபரப்பு

Thanga Tamil Selvan may be expelled from ammk party, may join Dmk or admk

by Nagaraj, Jun 25, 2019, 12:06 PM IST

டிடிவி தினகரனைப் பற்றி படுமோசமான வார்த்தைகளால் தங்க. தமிழ்ச்செல்வன் விமர்சித்த நிலையில் அமமுகவில் இருந்து அவர் வெளியேறும் முன்னரே வெளியேற்றப்படுவார் என்று தெரிகிறது. இதனால் அடுத்து தங்க தமிழ்ச்செல்வன் தஞ்சம் புகப் போவது திமுக வா? அதிமுகவா? என்ற விவாதங்கள் சூடாகி பரபரப்பாகியுள்ளது.

அமமுகவை டிடிவி தினகரன் தொடங்கிய போது, அவருடைய முக்கிய தளபதிகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் தங்க தமிழ்ச்செல்வன். ஜெயலலிதா இருந்த போதே தேனி மாவட்ட அதிமுகவில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர். ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்து ஆரம்பம் முதலே அரசியல் செய்தவர்.ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுகவில் இரு அணிகளாக பிளவுபட்ட போது சசிகலா அணியில் இருந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். ஆனால் மீண்டும் இரு அணிகள் இணைந்த போது ஓபிஎஸ்சை எதிர்ப்பதற்காகவே தினகரன் பக்கம் ஒரேயடியாக சாய்ந்தார்.

அமமுகவில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியில் அமர்த்தப்பட்ட தங்க. தமிழ்ச்செல்வனுக்கு அக்கட்சியில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட தமிழக முழுவதும் மேடைகளில் முழங்கியதுடன், ஊடக வெளிச்சமும் அவர் மீது அதிகமாகவே பாய்ந்து கிடுகிடுவென முக்கியத்தும் பெற்றார்.

ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலின் போதே டிடிவி தினகரனுக்கும், தங்க தமிழ்ச்செல்வனுக்கும் மனக்கசப்பு தொடங்கி விட்டதாம். தனது ஆண்டிபட்டி தொகுதியிலேயே எம்எல்ஏவுக்கு போட்டியிடத்தான் தங்க .

தமிழ்ச்செல்வன் விரும்பினாராம். ஆனால் ஓபிஎஸ் மகனை எதிர்ப்பதற்காக வலுக்கட்டாயமாக தேனி மக்களவைக்கு நிற்கச் சொல்லிவிட்டாராம் டிடிவி. அது முதலே இருவருக்கும் முட்டல் தொடங்கி விட்டதாம். ஆனால் அதனை வெளிக்காட்டாமல் தேர்தல் முடிவு வரை பொறுமை காத்த தங்க தமிழ்ச்செல்வன், அதன் பின் ஒதுங்க ஆரம்பித்து விட்டாராம்.

இதையறிந்த அதிமுக தரப்பு, தங்க.தமிழ்ச்செல்வனுக்கு வலை வீசியுள்ளது. அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணியுடன் ரகசிய பேச்சுவார்த்தையும் நடத்தினாராம். இதனாலேயே கடந்த சில நாட்களாக அதிமுகவில் இணைய தங்க. தமிழ்ச்செல்வன் தயாராகி விட்டார். விரைவில் முதல்வர் எடப்பாடியைச் சந்திக்கப் போகிறார் என்றெல்லாம் செய்திகள் றெக்கை கட்டிப் பறந்தன.

இதற்கெல்லாம் மழுப்பலாக பதிலளித்து வந்த தங்க தமிழ்ச்செல்வன், 2 நாட்களுக்கு முன்னர் டிவி விவாதம் ஒன்றில், முதல்வர் எடப்பாடியை அண்ணன் என்று உச்சரித்ததுடன், அதிமுக ஆட்சியையும் ஓகோவென புகழ்ந்தார். அத்துடன் டிடிவி தினகரனுடனான உரசலையும் அரசல் புரசலாக போட்டுடைத்தார்.

இதைக் கண்ட தினகரன் தரப்பு முன்னெச்சரிக்கையாக தேனி மாவட்ட அமமுக நிர்வாகிகளையாவது தக்க வைக்க முயற்சிகளை மேற்கொண்டது.அதன்படி மதுரை மாவட்ட அமமுக நிர்வாகிகளான டேவிட் அண்ணாதுரை, உசிலம்பட்டி மகேந்திரன் ஆகியோரை தேனிக்கு அனுப்பி அம் மாவட்ட அமமுக நிர்வாகிகளை சமாதானப்படுத்த கூட்டம் போட்டு பேசியுள்ளனர். இது தான் தங்க தமிழ்ச்செல்வனுக்கு கோபத்தை ஏற்படுத்தி, தினகரனின் உதவியாளரிடம் போனில் கன்னாபின்னாவென்று தங்க. தமிழ்ச்செல்வன் பேசியதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அந்த பேச்சு உரையாடல் பதிவை வெளியில் கசியவிட்டதும் தங்க .தழிழ்ச்செல்வன் தானாம்.

அந்த ஆடியோ பதிவில், டிடிவி தினகரன் கோழைத்தனமாக அரசியல் செய்வதாக பேசியதுடன், நீ தேனியில் கூட்டம் போட்டா நான் நாளைக்கு மதுரையில கூட்டம் போடுற பாக்கிறியா? என்றும் இப்படி பேடித்தனமாக அரசியல் பண்ண வேணாம் தோத்து போய்டுவா டிடிவி தினகரன் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.இது மட்டுமின்றி தினகரனைகளாலும் ஏக வசனத்தில் தங்க.தமிழ்ச்செல்வன் பேசியுள்ள இந்த ஆடியோவால் அமமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தேனி மாவட்ட அமமுக முக்கிய நிர்வாகிகள் அனைவரும் சென்னைக்கு அவசரமாக வரவழைக்கப்பட்டு, தினகரனுடனான சந்திப்பையும் நடத்தியுள்ளார். இதனால் இனியும் தங்க. தமிழ்ச்செல்வன் அமமுகவில் நீடிக்கப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. அவராக கட்சியை விட்டு விலகும் முன் அவரை கட்சியை விட்டே நீக்க வேண்டும் என்ற முடிவுக்கு அமமுக நிர்வாகிகள் பலரும் வந்து, தினகரனுடனும் ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் தங்க தமிழ்ச்செல்வன், அடுத்து தஞ்சமடையப் போவது எந்தக் கட்சியில் என்பது தான் இப்போது பரபரப்பான விவாதமாகிக் கிடக்கிறது. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மூலம் அதிமுகவில் இணைய முடிவெடுத்து விட்டதாக ஒரு பக்கம் கூறப்படுகிறது. ஆனால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மூலம் பேச்சுவார்த்தை நடத்தி திமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் இணையப் போகிறார் என்றும் செய்திகள் உலா வருகின்றன.

இதற்கிடையே தங்கள் கட்சியில் சேருமாறு தங்க தமிழ்ச்செல்வனுக்கு திவாகரனும் அழைப்பு விடுத்துள்ளாராம். இதனால் தங்க தமிழ்ச்செல்வன் அடைக்கலம் புகப் போவது திமுகவா?அதிமுகவா? தினகரன் கட்சியா? என்ற விவாதம் சூடாகியுள்ளது. இதற்கெல்லாம் பதிலளிக்க வேண்டிய தங்க .தமிழ்ச்செல்வனோ கேரளாவில் ஒரு ரகசிய இடத்தில் தங்கி தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறாராம். அவர் தமது செல்போனை ஆப் செய்துள்ளதால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

மதுபோதையில் போலீஸ் மீது கைவைக்கும் சம்பவம் அதிகரிப்பு..! அதிர்ச்சியில் சென்னை போலீஸ்

You'r reading இனி அமமுகவில் இடமில்லை... தங்க.தமிழ்ச்செல்வன் தஞ்சமடைவது திமுகவா? அதிமுகவா?- ஒரே பரபரப்பு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை