ஜோலார்பேட்டையில் இருந்து ரயில்களில் சென்னைக்கு குடிநீர் கொண்டு வர ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்துள்ள நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நீண்டகாலமாக பேசப்பட்ட இந்த திட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த திட்டத்தை சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இன்று இதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதேபோல், அம்மா அறிவித்த பேரூரில் 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
வறட்சி பாதித்த மற்ற கடலோர மாவட்டங்களில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. எந்தெந்த பகுதிகளில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை அமைக்கலாம் என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டு வரும் திட்டம் இன்னும் 2 வாரத்தில் செயல்படுத்தப்படும்.
தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டமாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். மழை பெய்யாததால்தான் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2-வது ஆலை அமைக்கும் பணி 2021ல் முடிந்து அதன்பிறகு தண்ணீர் விநியோகிக்கப்படும்.
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் மூலம் குடிநீர் சென்னைக்கு கொண்டு வர கூடுதலாக ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.