ஹரியானா காங்கிரஸ் தலைவர் விகாஸ் சவுத்ரி, 2 மர்ம நபர்களால் சரமாரியாக சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான விகாஸ் சவுத்ரி, டெல்லியை அடுத்துள்ள பரிதாபாத்தில் வசித்து வருகிறார். இங்குள்ள 9வது செக்டரில் ஒரு ஜிம் இருக்கிறது. இதற்கு இன்று காலையில் தனது காரில் வந்த விகாஸ் சவுத்ரி, பார்க்கிங்கில் காரை நிறுத்தினார்.
அச்சமயம், எங்கிருந்தோ 2 மர்ம ஆசாமிகள் கையில் துப்பாக்கியுடன் ஓடி வந்தனர். அவர்கள் இருவரும் கர்சீப்பால் முகத்தை மறைத்திருந்தனர். ஒருவர் காரின் முன்பகுதிக்கு ஓடி வந்து, டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த விகாஸ் சவுத்ரியை சரமாரியாக சுட்டார். முன்புற கண்ணாடியைத் துளைத்து கொண்டு சென்ற குண்டுகள், விகாஸ் சவுத்ரியின் மீது பாய்ந்தன. அதே சமயம், இன்னொரு மர்மநபர், பக்கவாட்டில் வந்து சவுத்ரியை நோக்கி சரமாரியாக சுட்டார்.
மர்ம நபர்கள் இருவரும் சவுத்ரி இதற்கு மேல் பிழைக்க மாட்டார் என்பதை உறுதி செய்து விட்டு தப்பியோடினர். ரத்த வெள்ளத்தில் மிதந்த விகாஸ் சவுத்ரியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டாதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சவுத்ரியை சுட்்ட காட்சிகள், ஜிம் வாயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. போலீசார் இதை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஹரியானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் அசோக் தன்வார், ‘‘மாநிலத்தில் பா.ஜ.க.வின் காட்டு தர்பார் ஆட்சி நடப்பதால்தான் இந்த கொடூரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.