மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தியை லக்னோவில் கரைத்த நிகழ்ச்சிக்கு இரண்டரை கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. இந்த தொகையை எந்த துறை ஏற்பது என்று உ.பி. மாநில அரசில் சண்டை நடக்கிறதாம்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி மரணம் அடைந்தார். அவர் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 5 முறை பதவி வகித்தவர். இதனால், அவரது அஸ்தியை கலசத்தில் எடுத்து வந்து கோமதி ஆற்றில் கரைத்தனர்.
இதற்காக கரையில் தனிமேடை அமைத்து, மலர் அலங்காரங்கள் செய்து, ஒலிபெருக்கிகள் வைத்து பிரம்மாண்டமான நிகழ்ச்சியே நடத்தப்பட்டது. வழக்கமாக, மறைந்த தலைவர்களின் பிறந்த நாளன்று அவர்களின் சிலைகளுக்கு மாநில அமைச்சர்கள் மாலை அணிவிப்பார்கள். சில தலைவர்களின் பிறந்த தினத்தையொட்டி அரசு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். அந்த நிகழ்ச்சிகளை மாநில அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறைதான் நடத்தும்.
அந்த அடிப்படையில், வாஜ்பாய் அஸ்தி கரைக்கும் நிகழ்ச்சியை உ.பி. மாநில அரசின் செய்தித்துறைதான் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அந்த துறையினர் லக்னோ வளர்ச்சிக் குழுமத்திடம் நடத்துமாறு கேட்டுக் கொண்டு, அதற்கான தொகையை பின்னர் கொடுத்து விடுவதாக கூறியிருக்கின்றனர். அதன்படி, அந்த குழுமம், வாஜ்பாய் அஸ்தி கரைக்கும் நிகழ்ச்சியை நடத்தியது. அதற்கு இரண்டரை கோடி ரூபாய் செலவானதாக பில் தயாரித்து செய்தித் துறைக்கு அனுப்பியது. இதை பார்த்ததும் அந்த துறையினர், ‘‘இவ்வளவு பெரிய தொகையை செலவழிக்க எங்கள் துறை பட்ஜெட் அனுமதிக்காது, இந்த செலவை நாங்கள் ஏற்க முடியாது’’ பதில் அனுப்பினர்.
இதன்பிறகு, இரண்டு துறைக்கும் கடிதச் சண்டை நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில், லக்னோ வளர்ச்சிக் குழும செயலாளர் எம்.பி.சிங் ஒரு பேட்டியின் போது, மாநில அரசின் செய்தித் துறை இந்த இரண்டரை கோடியை தராமல் இழுத்தடிப்பதாக தெரிவித்தார். இந்த செய்தி், பத்திரிகைகளில் வெளியானதும், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், லக்னோ வளர்ச்சிக் குழுமத்திற்கு பணத்தை செட்டில் பண்ணுமாறு செய்தித்துறைக்கு உத்தரவு போட்டிருக்கிறார்.
இதைத்தொடர்ந்து, செய்தித் துறை இயக்குனர் சிசிர் சிங், பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், ‘‘லக்னோ வளர்ச்சிக் குழுமத்திற்கு பணம் தருவதற்கான கோப்பு ரெடியாகி வருகிறது’’ என்றார்.