பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஸ்காட் மோரிசன் செல்பி எடுத்து, ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி, ஜப்பான் நாட்டில் நடைபெறும் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு கலந்து கொள்ளச் சென்றிருக்கிறார். அங்கு அவர் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பின், அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களை தனித்தனியே சந்தித்து பேசினார். அதே போல், ஆஸ்திரேலிய புதிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடனும் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்து கொண்ட ஸ்காட் மோரிசன் அந்த படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ‘‘கித்னா அச்சே ஹே மோடி’’ என்று இந்தியில் பதிவிட்டுள்ளார். ‘‘எவ்வளவு சிறந்த மனிதர் மோடி’’ என்று அவர் பாராட்டியிருப்பது இந்தியர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
கடந்த மாதம் ஆஸ்திரேலியாவிலும் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து ஸ்காட் மோரிசன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது பிரதமர் மோடியும், ஸ்காட் மோரிசனும் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.