தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சண்முகமும், காவல் துறை சட்டம், ஒழுங்கு டிஜிபியாக திரிபாதியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது தலைமைச் செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோரின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதனால் புதிய தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபி யார்? யார்?நியமிக்கப்படுவார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில் புதிய தலைமைச் செயலாளராக நிதித்துறை செயலாளர் பதவியில் இருந்த சண்முகம் நியமிக்கப் பட்டுள்ளார். தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம்,1985-ம் ஆண்டு பாட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியாவார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நிதித்துறை செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தார். கடந்த 9 வருடங்களாக தமிழக அரசின் பட்ஜெட் தயாரிப்பில் சண்முகம் முக்கியப் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல் சட்டம், ஒழுங்கு புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள திரிபாதி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரும் 1985-ம் ஆண்டு பாட்ஜ் ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.சென்னை நகர காவல்துறையில் பல ஆண்டுகளாக உயர் போலீஸ் அதிகாரியாக பணியாற்றியுள்ள திரிபாதி, தற்போது காவலர் தேர்வு வாரியத்தின் தலைவராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.