மே.வங்கத்தில் இஸ்லாமிய இளைஞர்களை 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் போடுமாறு அடித்துத் துன்புறுத்திய கும்பல் ஒன்று, 3 பேரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட கொடுமை நடந்துள்ளது.
சமீப காலமாக நாடு முழுவதும் ஜெய் ஸ்ரீராம் கோஷம் மீண்டும் வலுப்பெற்றுள்ளது. மக்களவையில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்ற போதும் சரி, அதன் பின்னர் மக்களவை நடவடிக்கைகளின் போதும் பாஜக தரப்பில் இந்தக் கோஷம் இப்போது ஓங்கி ஒலிக்கிறது என்றே கூறலாம்.
கடந்த வாரம் டெல்லியின் ரோகினி ஏரியாவில் முகமது மோமின் என்ற இஸ்லாமிய இளைஞரை, ஜெய் ஸ்ரீராம் கோஷம் போடுமாறு கட்டாயப்படுத்திய ஒரு கும்பல் அவரை அடித்து உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மே.வங்க மாநிலத்தில் 3 இஸ்லாமிய இளைஞர்களை ஜெய் ஸ்ரீராம் போட வலியுறுத்திய ஒரு கும்பல், மறுப்பு தெரிவித்தவர்களை அடித்து துன்புறுத்தியதுடன் 3 பேரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட கொடுமை அரங்கேறியுள்ளது.
மே.வங்கத்தின் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கிருந்து ஹீக்ளிக்கு செல்ல, முன்னாமுல்லா என்பவர் உள்பட 7 இஸ்லாமிய இளைஞர்கள் ரயிலில் பயணித்துள்ளனர். அப்போது ஒரு கும்பல் அவர்களை கலாட்டா செய்ததுடன், ஜெய் ஸ்ரீராம் கோஷம் போடுமாறு கட்டாயப்படுத்தியுள்ளது. இதற்கு மறுப்பு தெரிவிக்கவே, சரமாரியாக தாக்கியதுடன் முல்லா முன்னா உட்பட 3 பேரை ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளி விட்டுள்ளனர். இதில் 3 பேரும் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இந்தச் சம்பவம் மே.வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.