10 லட்சம் கார்டில் ஜெய் ஸ்ரீராம் மம்தாவை துரத்தும் பா.ஜ.க.

BJP Leader To Send 10 Lakh Jai Shri Ram Post Cards To Mamata Banerjee

by எஸ். எம். கணபதி, Jun 1, 2019, 21:01 PM IST

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்பும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு பா.ஜ.க.வினர் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலின் போது, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை பிரச்சாரம் செய்ய விடாமல், அதிக அளவு தொல்லை கொடுத்தது மேற்கு வங்க திரிணாமுல் அரசுதான். அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, மிகக் கடுமையாக மோடியை விமர்சித்தார். மோடியும், மம்தாவை விமர்சித்தார்.

தேர்தலின் போது இந்துத்துவா பிரச்சாரத்தை பா.ஜ.க. கையாண்டது. மம்தா பானர்ஜி செல்லும் இடங்களில் பா.ஜ.க.வினர் கூடி நின்று, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷம் எழுப்பினர். இதில் வெறுப்படைந்த மம்தா, யாராவது அந்த வார்த்தையைச் சொன்னாலே கோபப்பட ஆரம்பித்தார். அவ்வளவுதான். மம்தா போகும் இடங்களில் பா.ஜ.க.வினர் கூடிநின்று, ஜெய்ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பி அவரை வெறுப்பேற்றினர்.

வடக்கு பர்கானா மாவட்டம், பாத்பரா பகுதியில் மம்தா செல்லும் போது பா.ஜ.க.வினர் அப்படி கோஷம் போடவும், காரை விட்டு இறங்கி மம்தா பானர்ஜி, ‘நீ்ங்கள் வேறு மாநிலத்தில் இருந்து இங்கு வந்து வேண்டுமென்றே இப்படி செய்கிறீர்கள். நான் இதை பொறுத்து கொள்ள மாட்டேன்’’ என்று சொல்லி விட்டு, தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் அந்த நபர்களின் பெயர் விவரங்களை சேகரிக்குமாறு கூறினார். அதன்பின், அவர் புறப்பட்ட போதும் பா.ஜ.க.வினர் அந்த கோஷத்தை எழுப்பினர்.

தேர்தல் முடிந்த பின்பு, திரிணாமுல் கட்சியில் இருந்து 3 எம்.எல்.ஏ.க்கள், 56 கவுன்சிலர்களை பா.ஜ.க. இழுத்து கொண்டது. மேலும் பலரை பா.ஜ.க.வில் சேர்க்கவிருப்பதாகவும் அக்கட்சி தேசிய செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறினார். இதுவும் மம்தாவுக்கு எரிச்சலை ஊட்டியது.

தேர்தலுக்கு முன்பு, மம்தாவை எதிர்க்க முடியாமல் வலுவிழந்த காங்கிரஸ், கம்யூனி்ஸ்ட் கட்சிகளில் இருந்து பலரை பா.ஜ.க. தன் பக்கம் இழுத்திருந்தது. அதே போல், திரிணாமுல் கட்சியில் அதிருப்தியில் இருந்தவர்களையும் பா.ஜ.க. தன் பக்கம் இழுத்து கொண்டது. அப்படி திரிணாமுல் கட்சியில் இருந்து வந்து பா.ஜ.க.வில் சேர்ந்து எம்.பி.யானவர் அர்ஜூன்சிங்.

இவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘மம்தா பானர்ஜிக்கு ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற வார்த்தையைக் கேட்டாலே ஆத்திரம் வருகிறது. அதை சொல்வது குற்றமா? நாங்கள் தொடர்ந்து அந்த வார்த்தையை உச்சரிப்போம். மேலும், பத்து லட்சம் தபால் கார்டில் ஜெய் ஸ்ரீராம் என்று எழுதி மம்தாவுக்கு அனுப்பவிருக்கிறோம்’’ என்றார்.

You'r reading 10 லட்சம் கார்டில் ஜெய் ஸ்ரீராம் மம்தாவை துரத்தும் பா.ஜ.க. Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை