கர்நாடகாவில் 1ம், 2ம் வகுப்பு குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுத்தால், அந்த பள்ளிகளுக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று அம்மாநில அரசு எச்சரித்துள்ளது.
கர்நாடகாவிலும் ஏராளமாக தனியார் மெட்ரிக் பள்ளிகள் இருக்கின்றன. பல பள்ளிகளில் எல்.கே.ஜி. குழந்தைகளுக்கே வீட்டுப்பாடம்(ஹோம்ஒர்க்) கொடுக்கிறார்கள். இதற்கு அம்மாநில ஆரம்ப மற்றும் செகண்டரி பள்ளிக் கல்வித் துறை தடை விதித்துள்ளது. கே.ஜி. வகுப்புகள் முதல் 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என்று அப்படி கொடுக்கப்படும் பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
எனினும், அம்மாநிலத்தில் பல தனியார் பள்ளிகளில் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, 2ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுப்பதாக எந்த பள்ளி மீது புகார் வந்தாலும், அதை விசாரித்து உண்மை என தெரிய வந்தால், அந்த பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று கல்வித் துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி நிர்வாகம் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறி்க்கை விடுத்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.