கட்சியில் டிடிவி தினகரன் ஒன் மேன் ஆர்மி போல் செயல்படுகிறார். இதனால் எஞ்சியவர்களும் அவரை விட்டு விலகி அமமுக கூடாரமே காலியாகிவிடும் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரனை கன்னாபின்னாவென தரக்குறைவாக தங்க தமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ வெளியாகி இருவருக்குமிடையே விரிசல் ஆகிவிட்டது. இதனால் இனிமேல் அமமுகவில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு இடமில்லை என்றாகிவிட்டது. தங்க தமிழ்ச்செல்வன் பற்றி விமர்சித்திருந்த தினகரன், அவர் வேறு கட்சிக்கு போவதற்கு தயாராகி விட்டதால், யாரோ சொல்லித்தான் இப்படி பேசுகிறார். என்னைப் பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடக்கூடியவர் என்றெல்லாம் தினகரன் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் சர்ச்சை ஆடியோ வெளியான பின் நேற்று முழுவதும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்த தங்க. தமிழ்ச்செல்வன் இன்று வெளியில் தலை காட்டினார்.சென்னை செல்வதற்காக மதுரை வந்த தங்க .தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:
அமமுக தொடங்கியது முதலே தினகரனுடன் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. பிறருடனான தனிப்பட்ட சந்திப்புகளை எல்லாம் வீடியோ, ஆடியோவாக வெளியிட்டு அம்பலப்படுத்துவது எல்லாம் நல்ல பண்பாடே கிடையாது. ஆனால்,ஓ.பன்னீர்செல்வம், பொன்.ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர் போன்றோருடன் நடந்த சந்திப்பை தினகரன் வெளியில் சொன்னது நாகரீகம் இல்லாதது.
நாங்கள் 18 எம்எல்ஏக்கள் இல்லையென்றால் தினகரனே இல்லை என்றாகி இருக்கும். அவரிடம் பெட்டிப் பாம்பாக அடங்குவதற்கு சம்பளம் வாங்கி கொண்டா கட்சியில் இருக்கிறேன்? அமமுகவில் நிர்வாகம் மொத்தமாக சரியில்லை.இன்மேல் தினகரனுடன் மீண்டும் இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை.
தினகரன், 'ஒன் மேன் ஆர்மி'யாக தன்னை நினைத்து செயல்படுவதால், பலர் வெளியே வந்துவிட்டனர். எஞ்சியவர்களும் விரைவில் வெளியேறி அந்தக் கட்சியின் கூடாரமே காலியாகி விடும் என்றார் தங்க. தமிழ்ச்செல்வன்.