தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக ஜாபர்சேட் நியமிக்கப்படலாம் என்றும், நாளை(ஜூன் 20) அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தெரிகிறது.
தமிழக டி.ஜி.பி.யாக உள்ள டி.கே.ராஜேந்திரன் ஏற்கனவே பணிநீட்டிப்பில் உள்ளார். அந்த பதவிக்காலமும் இம்மாதம் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய டி.ஜி.பி.யை தேர்ந்தெடுக்கும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
இதற்காக டி.ஜி.பி. அந்தஸ்தில் சீனியாரிட்டியில் உள்ள 5 பேரின் பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு(யு.பி.எஸ்.சி) தமிழக அரசு அனுப்பியுள்ளது. தேர்வாணையத்தில் நாளை இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு, அவர்கள் மூன்று பேர் கொண்ட பட்டியலை மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பி வைப்பார்கள். அதில் இருந்து ஒருவரை தமிழக அரசு தேர்வு செய்து டி.ஜி.பி.யாக நியமிக்கும்.
டி.ஜி.பி.யாக நியமிக்கப்படுபவர் 2 ஆண்டுகளுக்கு பணியில் நீடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, புதிய டி.ஜி.பி அதற்கு முன்பாக ஓய்வு வயதை எட்டினாலும் 2 ஆண்டுகளுக்கு தொடர்ந்து பதவியில் நீடிப்பார்.
தற்போது டி.ஜி.பி.க்கள் அந்தஸ்தில் உள்ள ஜாங்கிட், காந்திராஜன், ஜாபர்சேட், திரிபாதி, லட்சுமிபிரசாத் ஆகிய 5 பேரின் பெயர்கள் யு.பி.எஸ்.சி.க்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறதாம். இவர்களில் ஜாங்கிட், காந்திராஜன் ஆகியோருக்கு இன்னும் நான்கு மாதங்களே பணிக்காலம் உள்ளதால், அவர்களை யு.பி.எஸ்.சி பரிந்துரைக்காது என்று கூறப்படுகிறது.
மீதி 3 பெயர்களை தமிழக அரசுக்கு அனுப்பும் பட்சத்தில் அவர்களில் ஜாபர்சேட்டை தமிழக அரசு புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கலாம் என தெரிகிறது. இதற்காகவே, ஜாபர்சேட் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்து, தன் மீதான வீட்டுமனை வழக்கை ரத்து செய்து உத்தரவு பெற்றிருக்கிறார். தி.மு.க. ஆட்சியின் போது தமிழக அரசின் விருப்ப ஒதுக்கீட்டில் வீிட்டுமனை வாங்கியதில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஆனால், அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முறையாக அரசு அனுமதி பெறவில்லை என்பதால், அந்த வழக்கு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
எனவே, ஜாபர்சேட்தான் புதிய டி.ஜி.பி.யாக வருவார் என்று கூறப்படுகிறது. அதே சமயம், திரிபாதிக்கும் வாய்ப்பு உள்ளதாக காவல் துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது.