குட்கா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டி.எஸ்.பி. மன்னர்மன்னன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளா். இதன் மூலம், குட்கா முறைகேடு வழக்கு மீண்டும் தோண்டப்படுகிறதா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட பான் மசாலா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், இவை கடைகளில் தாராளமாக விற்கப்பட்டன. இதற்காக, குட்கா தயாரிக்கும் கம்பெனிகள், அமைச்சர், டி.ஜி.பி, சென்னை போலீஸ் கமிஷனர் உள்பட பலருக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது வருமானவரித் துறையினர் நடத்திய ரெய்டுகளின் போது, குட்கா விவகாரத்தில் லஞ்சம் வாங்கியவர் பட்டியல் அடங்கிய டைரி எடுக்கப்பட்டது. அதை தமிழக அரசு தலைமைச் செயலாளரிடம் வருமானவரித் துறை அதிகாரிகள் கொடுத்தனர். அதன்பிறகு, அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆனால், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் உள்பட பலர் மீது லஞ்ச புகார் கூறப்பட்டது. இதன்பின், சில நாட்களில் இந்த விவகாரம் அடங்கிப் போனது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய டி.எஸ்.பி. மன்னர்மன்னன் இன்று திடீரென சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். நாளை ஓய்வு பெறவிருக்கும் நிலையில் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
தற்போது மதுரை ரயில்வே டி.எஸ்.பி.யாக உள்ள மன்னர்மன்னன், முன்பு புழல் டி.எஸ்.பியாக இருந்த போது, புழலில் குட்கா குடோனில் நடந்த ரெய்டுகள் தொடர்பாக சாட்சியங்களை மறைத்து லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
மன்னர்மன்னன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதால், தொடர்ந்து குட்கா வழக்கில் அதிரடி விசாரணைகள் நடைபெறுமா, பெரிய புள்ளிகள் மீண்டும் சிக்குவார்களா என்ற பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
குட்கா வழக்கில் குற்றவாளிகளை விடுவிக்க முயற்சிக்கிறது சிபிஐ: ஸ்டாலின் குற்றச்சாட்டு