தினகரனின் அ.ம.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்த சசிரேகாவுக்கு உடனடியாக பதவி வழங்கப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அ.ம.மு.க ஒரு இடம் கூட வெற்றி பெறாத நிலையில், அக்கட்சி கலகலக்கத் தொடங்கியுள்ளது. டி.டி.வி. தினகரனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த தங்கத்தமிழ்ச்செல்வனே தி.மு.க.வுக்கு போய் விட்டார். அவர் அ.தி.மு.க.வில்தான் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. காரணம், அவர் எடப்பாடி அரசை திடீரென புகழ்ந்ததுதான். ஆனால், அங்கு அவருக்கு ஓ.பி.எஸ். அணி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அதனால்தான், அவர் தி.மு.க.வுக்கு தாவி விட்டார்.
இதற்கிடையே, அ.ம.மு.க.வின் செய்தி தொடர்பாளராக இருந்த சசிரேகாவும் அங்கு இடத்தை காலி செய்தார். அவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தார். டி.டி.வி.தினகரனுக்காக ஊடகங்களில் கடுமையாக வாதாடியதுடன், எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ்.சை கடுமையாக விமர்சித்து வந்தவர் சசிரேகா.
இந்நிலையில், அ.தி.மு.க.வில் சேர்ந்த சசிரேகாவுக்கு உடனடியாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.